Chandrayaan EXCLUSIVE: சந்திரயான் 3 தரையிறக்கம்; பரபர 17 நிமிடங்கள் எப்படி இருக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பிரத்யேகப் பேட்டி!
Chandrayaan 3 Landing: அதனால்தான் ஸ்பேஷ் ஷட்டில் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நிலவில் காற்றே இல்லை என்பதால் இவை எதுவுமே சாத்தியமில்லை.

உலகமே உற்றுநோக்கும் தருணம் இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிகழ உள்ளது. அதாவது நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்க உள்ளது. இந்த நிலையில், சந்திரயான் லேண்டர் தரையிறங்குவதில், கடைசி 18 நிமிடங்கள் சிக்கலாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்தும், தரையிறங்குவதற்கான சாத்தியம் குறித்தும், மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ABP Nadu-க்குப் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி எந்த அளவுக்கு சாத்தியம்?
சந்திரயானில் உள்ள 4 இஞ்ஜின்களில் 2 வேலை செய்தால் போதும் என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் தரை இறங்கும்போது இடர் உணரும் திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு கருவி பொருத்தப்பட்டுள்ளது. செயற்கை நிலா போன்று உருவாக்கப்பட்டு, அதில் பல முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தரை இறங்குவதற்கான வாய்ப்பு மிகமிகப் பிரகாசமாக உள்ளது. 99.99 சதவீதம் அளவுக்கு வெற்றிவாய்ப்பு நமக்கு உறுதிதான்.
தரை இறங்குவதற்கான கடைசி 15 நிமிடங்கள் எவ்வளவு கடினமானதாக இருக்கும்? அந்த செயல்முறை எப்படி இருக்கும்? இது ஹெலிகாப்டர், விமானங்கள் இறங்குவதைப் போன்றதல்லதானே?
ஒரு பொருள் மேலே வேகமாகச் செல்லவேண்டும் எனில், முடுக்கம் கொடுக்க வேண்டும். அதேபோல கீழே இறங்க முடுக்கத்தைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் அதிவேகத்தில் வந்து, நொறுங்கிவிடும்.
இன்னொரு முக்கியமான ஒன்று. பூமியில் ஒரு பொருள் தரை இறங்க, ஏர் பேக், பாராசூட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. அல்லது விமானத்தின் இறக்கைகள் மூலம் வேகத்தைக் குறைக்கலாம். அதனால்தான் ஸ்பேஷ் ஷட்டில் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நிலவில் காற்றே இல்லை என்பதால் இவை எதுவுமே சாத்தியமில்லை.
இந்த சூழலில், ராக்கெட் மூலமாகத்தான் வேகத்தைக் குறைக்க முடியும். பின்புறமாக ராக்கெட்டை வெடிக்க வைத்து, உந்துசக்தி கொடுத்து வேகத்தை அதிகப்படுத்துவதுபோல, முன்புறமாக ராக்கெட்டை வெடிக்க வைத்து, வேகத்தை குறைக்க உள்ளோம்.
சந்திராயனில் உள்ள 4 கால்களில் நான்கு இஞ்ஜின்கள் உள்ளன.இதில் ஏதேனும் ஒன்றில், எரிபொருள் தளும்பினால் அதிக ஆற்றல் கிடைக்காது. அப்போது சமநிலை பாதிக்கப்படலாம். அதை சரிசெய்யாவிட்டால், விண்கலமே கவிழ்ந்துவிடலாம். இவை எதையுமே பூமியில் இருந்து நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
ஏனெனில் ஒளியின் வேகத்தில் நாம் சமிக்ஞைகளை அனுப்பினாலும் அது நிலவுக்குப் போய்ச்சேர 1.25 நொடிகள் ஆகும். மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்லும் விண்கலத்துக்கு, 1.25 தாமதத்தில் சமிக்ஞைகளை அனுப்பினால் எந்த பயனும் இருக்காது. அதனால் செயற்கை நுண்ணறிவு சென்சார் தயார் செய்யப்பட்டு, சந்திராயனிலேயே பொருத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்லும் லேண்டர், 1,200 கி.மீ. வேகத்துக்குக் குறைக்கப்படும். இதில் மயிரிழை அளவு தவறு நடந்தாலும், அதற்கேற்ற விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். எனினும் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வதில் இதுவரை 45 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இதில் பாதிக்கும் மேல் தோல்வியில் முடிந்துள்ளன. இத்தகைய தொழில்நுட்பச் சவால்களை மீறித்தான் தரையிறங்க வேண்டும்.
சாஃப்ட் லேண்டிங் என்றால் என்ன? அடிபடாமல் பத்திரமாகத் தரையிறங்குவதுதானா?
ஏதேனும் ஒரு பொருளைக் கீழே இருந்து தூக்கிப் போட்டால் உடைந்துவிடும். விண்கலம் செயலிழந்து தானாக விழுந்து உடைந்தால், அது Crash Landing. அவ்வாறு ஆகாமல், உடையாமல் இறங்குவது Soft Landing. உதாரணத்துக்கு, ஒரு நபர் பாராசூட் மூலம் கீழே இறங்குவது Soft Landing. அதேபோல, விமானமோ, விண்கலமோ பத்திரமாகத் தரையிறங்கினால், அதுவும் Soft Landingதான்.
தரையிறங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படுமா?
நிலவின் தரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தரை இறங்கும் முன்னால், ராக்கெட், சென்ஸார், செயற்கை நுண்ணறிவு என ஒவ்வொரு கருவியும் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதிக்கப்படும். இதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும் கடைசி நேரத்தில் ஏற்படும் நிகழ்வால், எப்படி வேண்டுமானாலும் தரையிறங்குவது மாறலாம். அதை நம்மால் இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது.
எனினும் தரை இறங்கும் செயல்முறையைத் தொடங்கிய பிறகு, நம்மால் பின்வாங்க முடியாது. ஏனெனில் செயற்கை நுண்ணறிவு கருவிக்குத் தேவையான கட்டளைகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும். அப்போது அதை நம்மால் மாற்றி அமைக்க முடியாது.
இவ்வாறு மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Chandrayaan 3 Landing LIVE: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்.. உடனடி அப்டேட்ஸ் இங்கே...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

