விழுப்புரம்: அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.51 லட்சம் மோசடி - காவல் ஆய்வாளர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த காவல் ஆய்வாளர் அதிரடியாக கைது .
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே சூசைபுரம் காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 58). இவர் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தன்னுடைய மகனுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தார். இதுபற்றி செல்லதுரை தனது நண்பரான டேவிட்சனிடமும் கூறினார். அதற்கு அவர் தனது நண்பர் குமரய்யா என்பவர் அரசு வேலை வாங்கித்தருவார் என்றும் அவரை அணுகுமாறும் கூறினார். இதையடுத்து குமரய்யாவை செல்லத்துரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குமரய்யா, தான் விழுப்புரத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தமிழக முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையில் உள்ளதாகவும், எனக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அவர்களது செயலாளர்கள் ஆகியோரிடத்தில் நேரடியாக பேசி உங்கள் மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் பொறியாளர் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய செல்லத்துரை தனது மகனின் வேலைக்காக விழுப்புரம் வந்து குமரய்யாவை சந்தித்து அவரிடம் ரூ.31 லட்சத்தை கொடுத்தார். இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த கணேசன், ஸ்டெல்லா மேரி, பிராங்கிளின் ராஜேஷ், ஜெரிஷ்பெனிலா ஆகியோரிடமும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டார். ஆனால் பணத்தைப்பெற்ற அவர் அரசு வேலை ஏதும் வாங்கித்தராமலும், உரியவர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் குமரய்யா, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் மீதான புகாரையடுத்து அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் குமரய்யா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நேற்று ஆய்வாளர் குமரய்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் பணம் மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.