பாலியல் சீண்டல்; ஆசிரியர் போக்சோவில் கைது - ஆதரவாக பெற்றோர்கள் - விழுப்புரத்தில் பரபரப்பு
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது.
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று ஆசிரியரின் மேல் தவறிருக்க வாய்ப்பில்லை என கூறி சில பெற்றோர்கள் பள்ளியின் வாயிலை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வாக்கூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் ஆசிரியராக கருணாகரன் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் வந்தன. இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன் மற்றும் குழந்தைகள் அவசர உதவி அலகின் பணியாளர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் அப்பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மூன்றாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் எழுந்து தங்கள் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர் கருணாகரன் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து 13 மாணவிகளிடம் விசாரனை செய்ததில் நான்கு மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன் இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆசிரியர் கருணாகரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளியில் படிக்கும் 13 மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று வாக்கூர் கிராமத்தில் செயல்படும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் கருணாகரன் மீது எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை என்றும் வேண்டுமென்றே பள்ளியில் கருணாகரன் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் காழ்ப்புணர்ச்சிகாரணமாக சிக்க வைத்துள்ளதாக கூறி பள்ளியின் வாயிலில் முற்றுகையிட்டு ஆசிரியர் கருணாகரனை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.