Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death in Tamil Nadu: மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் காவல்நிலையங்களிலும், காவல்துறை விசாரணையிலும் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த 23 நபர்களின் பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் வெளியிட்டுள்ளார்.

சிவகங்கையில் நகை திருடு போன குற்றச்சாட்டில் காவலாளி அஜித்குமார் என்பவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இடத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இந்த விவகாரத்தில் அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயம் இருந்ததாகவும், அவரது காது, வாய் மற்றும் பிறப்புறுப்புகளில் மிளகாய் பொடி தூவியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
லாக்கப் டெத் பட்டியலை வெளியீடு:
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த 5 ஆண்டுகளில் காவல் நிலையங்களிலும், காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அந்த பட்டியலின் விவரம் பின்வருமாறு:
1. பிரபாகரன் (வயது 45) - நாமக்கல் மாவட்டம்
2. சுலைமான் (வயது 44) - திருநெல்வேலி மாவட்டம்
3. தாடிவீரன் (வயது 38) - திருநெல்வேலி மாவட்டம்
4. விக்னேஷ் (வயது 25) - சென்னை மாவட்டம்
5. தங்கமணி (வயது 48) - திருவண்ணாமலை மாவட்டம்
6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) - சென்னை மாவட்டம்
7. சின்னதுரை (வயது 53) - புதுக்கோட்டை மாவட்டம்
8. தங்கபாண்டி (வயது 33) - விருதுநகர் மாவட்டம்
9. முருகாநந்தம் (வயது 38) - அரியலூர் மாவட்டம்
10. ஆகாஷ் (வயது 21) - சென்னை மாவட்டம்
11. கோகுல்ஸ்ரீ (வயது 17) - செங்கல்பட்டு மாவட்டம்
12. தங்கசாமி (வயது 26) - தென்காசி மாவட்டம்
13. கார்த்தி (வயது 30) - மதுரை மாவட்டம்
14. ராஜா (வயது 42) - விழுப்புரம் மாவட்டம்
15. சாந்தகுமார் (வயது 35) - திருவள்ளூர் மாவட்டம்
16. ஜெயகுமார் (வயது 60) - விருதுநகர் மாவட்டம்
17. அர்புதராஜ் (வயது 31) - விழுப்புரம் மாவட்டம்
18. பாஸ்கர் (வயது 39) - கடலூர் மாவட்டம்
19. பாலகுமார் (வயது 26) - இராமநாதபுரம் மாவட்டம்
20. திராவிடமணி (வயது 40) - திருச்சி மாவட்டம்
21. விக்னேஷ்வரன் (வயது 36) - புதுக்கோட்டை மாவட்டம்
22. சங்கர் (வயது 36) - கரூர் மாவட்டம்
23. செந்தில் (வயது 28) - தர்மபுரி மாவட்டம்
இதில் குறைந்தபட்சமாக 20 வயது வாலிபர் ஆகாஷ் முதல் 60 வயது முதியவர் ஜெயக்குமார் ஆகிய 23 நபர்களின் மரணங்கள் அடங்கும்.
மன்னிப்பு கேட்பாரா?
இந்த பட்டியலை பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.
ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?
இவர்களது பெற்றோரிடமும், மனைவி-மக்களிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





















