27 ஆண்டுகள்... மக்கள் பட்டபாடுகள்... வாணியம்பாடி பெண் தாதா சிக்கிய கதை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை தலைமையிடமாக கொண்டு மகேஷ்வரி என்ற பெண் சாராய வியாபாரின் கீழ் செயல்படும் சமூக விரோத கும்பலால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாணியம்பாடி நிம்மதி இழந்து வருகிறது. 80 வழக்குகள், 7 குண்டர் சட்டம் மகேஷ்வரி மீது பாய்ந்தும் தொடந்தே வருகிறது சாராய விற்பனை காவல் துறை துணையில்லாமல் இது சாத்தியம் அல்ல என்கின்றனர். வாணியம்பாடி வாழ் நகர மக்கள். மேலும் கடந்த 2 மாதங்களாக பெரும் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வாணியம்பாடி நேதாஜி நகர் பொது மக்கள்.
அண்மை கால முதல் சம்பவம்:
கள்ளசாராய விற்பனை தடுக்க கோரி சாராய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதிலும் அவருடைய கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின் போது சாராய கும்பால் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக அப்பகுதி இளைஞர்கள் தாலுக்கா காவல் நிலையத்தில் சாராய விற்பனை குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அன்று மாலையே சாராய வியாபாரியின் அடியாட்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காத போலீசார் கண்டித்தும், தங்கள் பகுதியில் சாராய விற்பனை தடுக்கக் கோரியும், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேதாஜி நகர் பகுதியில் வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நபர் ஒருவர் தலையில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து மீட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி போராட்டத்தை தீவிர படுத்தினர். மேலும் இளைஞர்கள் சிலர் அப்பகுதியில் சாராயம் விற்பனைக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை தீயிட்டு கொளுத்தினர். மேலும் கள்ளச்சாராய விற்பனைக்கு உடைந்தயாக உள்ள வீடுகள் மீது கல் வீசினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸார் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையின் நேற்று இரவு சாராய வியாபாரி மற்றும் தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் காரணமாக வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூட்டிய வீட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல், 18 பேர் கைது.
வாணியம்பாடி நேதாஜி நகர், காமராஜர் நகர், லாலா ஏரி உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். மேலும் மேலே பாடித்தது போல கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30 மூட்டைகளில் பாதுக்கி வைக்கபட்டிருந்த கள்ளச்சாராய மூட்டைகள் பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்களின் புகாரின் பேரில் வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராய கும்பலை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை முழுவதும் ஒழிக்கவும், கள்ளச்சாராய கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க டி.எஸ்.பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான 20 பேர் கொண்ட போலீசார் குழு நேதாஜி நகர், லாலா ஏரி, இந்திரா நகர் காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீடுகளை சோதனை செய்த போது பவுணம்மாள் என்பவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 மூட்டைகள் மற்றும் 2 லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராய பாக்கெட்டுகள், 2 பேரல்கள் , ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான மகேஷ்வரி, அவருடைய கணவர் சீனிவாசன் உட்பட மேலும் 10 பேரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
2வது முறையாக கள்ள சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்
தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி நேதாஜி நகர் பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் காவல் நிலையம் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை பல மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 07.03.2022 ஆம் தேதி சாராய விற்பனை செய்யும் கொட்டகை மற்றும் சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி கிராம மக்கள் சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாராய கொட்டகைக்கு தீ வைத்து எரித்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து காவல்துறையினரால் சாராயம் விற்கும் கும்பலை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர். சாராய கும்பலின் தலைவி முக்கிய குற்றவாளியான மகேஸ்வரியை இதுவரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் மீண்டும் காமராஜ் நகர் பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சாராயம் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது சாராயம் விற்றுகொண்டிருந்த 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட கள்ளச் சாராய முட்டைகளை கைப்பற்றி கிராம மக்கள் உயரதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாராய பாக்கெட்டுகளை காவல் துறையினர் கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கிய குற்றவாளியை கைது செய்யாதது சாராய விற்பதற்கு முக்கிய காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம மக்களே சாராயம் விற்றுக்கொண்டிருந்த சதீஷ் குமார் என்ற இளைஞர் விரட்டி சென்று பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனைக்கு போலீஸார் முழுக்க முழுக்க துணையாக உள்ளார் என்பது பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். 2 வது முறையாக கிராம மக்களே சாராயம் விற்கும் இடத்தை முற்றுகையிட்டு சாராய முட்டைகளை கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக வழக்கம் போல் கைதான சாராய வியாபாரி மகேஸ்வரி: 2 வர் தப்பியோட முயன்று வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு
வாணியம்பாடி நேதாஜி நகர், காமராஜ் நகர், லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சாராயத்தை பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் வளர்ப்பு மகள் உஷா மகன்கள் தேவேந்திரன், சின்னராஜ் மற்றும் இவர்களுக்கு உதவிய நளினி உட்பட 7 பேர் கடந்த 9-ம் தேதி இரவு திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில் சமீபத்தில் செய்யாறு பகுதியில் உள்ள விஜி என்பவரிடமிருந்து 80 எரிசாராய கேன்களை வாங்கி விற்பனை செய்தது போக மீதமுள்ள எரிசாராய கேன்களை தனது நேதாஜி நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தொட்டியில் வைத்து பதுக்கி வைத்திருப்பதாக மகேஸ்வரி மூலம் தகவல் கிடைக்கவே மேற்படி சாராயக் கேன்களை கைப்பற்ற காவல்துறையினர் மகேஸ்வரியின் மகனான சின்ன ராஜ், மற்றும் அவனது கூட்டாளி கல்லப்பாடி மோகன் உள்ளிட்டோரை அழைத்து சென்று சாராயக்கடைகளை பதுக்கி வைத்து இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டுக் கொண்டு இருக்கும் சமயத்தில் காவல்துறையினருக்கு போக்கு காட்டி இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்ற பொழுது அங்கிருந்து தப்பி ஓடியவர்கள் இருவரும் பாறைகளின் நடுவே வழுக்கி விழுந்ததில் சின்னராஜ்க்கு கையில் முறிவும் அதேபோல கல்லப்பாடி மோகனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மாவுக்கட்டு போட்டு அழைத்து வந்து அனைவரையும் வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்