சேலத்தில் தேசியக் கொடி, அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய இருவரிடம் போலீஸ் விசாரணை
நடிகை நமீதா, அவரது கணவர் சவுத்ரி மற்றும் வங்கி அலுவலர்கள் தொழில் முனைவோர் என 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முறைகேடா? என காவல்துறையினர் விசாரணை.
![சேலத்தில் தேசியக் கொடி, அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய இருவரிடம் போலீஸ் விசாரணை Salem news Police investigating two people who misused national flag and government seal TNN சேலத்தில் தேசியக் கொடி, அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய இருவரிடம் போலீஸ் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/ba7ec3758ba40209b1ba9045972f321a1698749602317113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலத்தில் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் மற்றும் 6வது எடிஷன் எம்எஸ்எம்இ ஸ்கேலப் என்ற தனியார் நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சி பிரபல தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் இந்த அமைப்பின் தேசிய தலைவராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், அதேபோல் அந்த அமைப்பின் தேசிய செயலாளராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் உள்ளனர். மேலும் பாஜக பிரமுகரும், திரைப்பட நடிகையுமான நமீதாவின் கணவர் சவுத்ரி தமிழ்நாடு சேர்மனாக இருக்கின்றார்.
இந்த கூட்டத்தில் நடிகை நமீதா மற்றும் வங்கி அலுவலர்கள் தொழில் முனைவோர் என 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்ட சூரமங்கலம் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் கைது செய்து சேலம் மாநகர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல்துறை விசாரணையில் தேசிய தலைவராக உள்ள முத்துராமன் என்பவர் 3 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது டெல்லி செல்லும்போது பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ்யுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய விசிட்டிங் கார்டு மற்றும் சொகுசு காரில் அசோக சின்னம் மற்றும் தேசியக் கொடியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோன்று பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்ததாகவும், முத்துராமனுடன் சேர்ந்து கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு இந்த அமைப்பை பதிவு செய்து வங்கி அலுவலர்களை அழைத்து தொழில் முனைவோர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளனர். முதலில் சென்னை, மதுரை தற்போது சேலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இருவரிடமும் தேசியக் கொடி மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதை போன்று, பண மோசடி போன்ற ஏதேனும் குற்றசெயல் ஈடுபட்டுள்ளனரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)