Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்: ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை
சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக மைசூரை சேர்ந்த நாட்டு வைத்தியரை கடத்தி,ஒரு வருடத்திற்கு மேல் வீட்டு சிறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய விவகாரத்தில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
![Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்: ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை Kerala businessman arrested for abducting Mysore doctor, chopping him into pieces to find out the secret of treatment Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்: ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/22/1604d7e220cec1f3285078c83ff4534c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாரம்பரிய நாட்டு வைத்தியர்:
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஷாபா செரீப் என்பவர் பாரம்பரிய நாட்டு வைத்தியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மைசூரில் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய் குணமானதால் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ,கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஷாபா ஷெரீப்பிடம் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாபா ஷெரீப் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூர் போலீசில் புகார் செய்திருந்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொழிலதிபர் ஷெபின் அஷ்ரப்:
இந்த நிலையில் கடந்த மாதம் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் பகுதியை சேர்ந்த ஷெபின் அஷ்ரப் என்ற தொழிலதிபர் நிலம்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகாரில் தனது உதவியாளர் உட்பட ஏழு பேர் வீடு புகுந்து தன்னை கட்டிப்போட்டு 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து நிலம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .இதில் ஷெபினின் உதவியாளரான நவ்ஷாத் என்பவரை போலீசார் கைது செய்தனர் மற்றும் ஆறு பேரையும் தேடி வந்தனர். இவர்களில் ஐந்து பேர் கடந்த மாதம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதை அடுத்து திருவனந்தபுரம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தானாக சிக்கிய தொழிலதிபர்:
மைசூர் வைத்தியர் ஷாபா ஷெரீப் குறித்து ஷெபின் அஷ்ரபுக்கு தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரை கடத்தி மிரட்டி சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொண்டு தானும் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை தொடங்கி அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என தொழிலதிபர் ஷெபின் அஷ்ரப் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வைத்தியர் ஷாபா ஷெரீப்பை மைசூரிலிருந்து தொழிலதிபர் கடத்தியுள்ளார். பின்னர் ஷெபின் அவரை ஊரில் உள்ள தன்னுடைய வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்துள்ளார் .அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து கொடுமைப்படுத்தி சிகிச்சை ரகசியத்தை கூறுமாறு மிரட்டியுள்ளார் . ஆனால் அதற்கு ஷாபா ஷெரீப் மறுத்துள்ளார்.
ரகசியத்தை கூறாததால் - துண்டு துண்டாக வெட்டி கொலை:
ஒரு வருடத்திற்கு மேலாக அடித்து கொடுமைப்படுத்தியும் அவர் சிகிச்சை ரகசியத்தை கூறாததால், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழில் அதிபர் அஷ்ரப் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஷாபா ஷெரீப்பை கொலை செய்தார். பின்னர் வைத்தியரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அங்குள்ள ஆற்றில் வீசியுள்ளார். நிலம்பூர் போலீஸின் தீவிர விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்தன . மைசூர் வைத்தியரை கொடுமைப்படுத்தும் ஒரு சில வீடியோக்களையும் அஷ்ரபின் கூட்டாளிகள் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தனர். இந்த வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் ஷாபா ஷெரீப் இன் உறவினர்களுக்கு காண்பித்துள்ளனர் .வீடியோவில் இருப்பது ஷாபாஸ் ஷெரீப் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்த பின்பு நாட்டு வைத்தியரை கடத்தி கொலை செய்த தொழிலதிபர் அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் தலைமறைவு:
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இவர்களைத் தவிர முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் மேலும் ஐந்து பேர் தற்போது தமிழகத்தில் தலைமறைவாகி உள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்-ல் இருந்து குற்றவாளிகளில் ஒருவர் பணம் எடுக்கும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதைத்தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை சல்லடை போட்டு தேடி வருகின்றனர், இவர்களை கண்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவுமாறு, கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)