Akshaya Tritiya 2024 Date: அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
Akshaya Tritiya 2024 Date and Time: இந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாளாக கருதப்படும் அட்சய திரிதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகான வளர்பிறையில் மூன்றாம் நாள் கொண்டாடப்படும்.
அட்சய திரிதியை வரும் மே 10 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய நாளில் எந்த நேரத்தில் நாம் செயல்களை தொடங்கலாம் என்பது பற்றி காணலாம்.
அட்சய திரிதியை
இந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாளாக கருதப்படும் அட்சய திரிதியை நாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகான வளர்பிறையில் மூன்றாம் நாள் கொண்டாடப்படும். இதில் அட்சயா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “எப்போதும் குறையாதது” என்று பொருள். இந்த நாளில் ஆடை, அணிகலன்கள், நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குதல், நல்ல விஷயங்களை செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஆனால் நம் மக்களிடையே அட்சய திரியை நாளில் தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நம்மால் முடிந்த எதை வேண்டுமானாலும் இந்த நாளில் வாங்கலாம்.
நல்ல நேரம் எப்போது?
அட்சய திரிதியை மே 10 ஆம் தேதி அதிகாலை 4.17 மணி முதல் மே 11 ஆம் தேதி மதியம் 2.50 மணி வரை உள்ளது. ஆனால் இரண்டு நாட்களிலும் அதிகாலை 5.45 முதல் மதியம் 12.06 வரை அட்சய திரியை நாளில் அணிகலன்கள், நிலம் வாங்குதல் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்வதற்கான நல்ல நேரமாகும். முடியாதவர்கள் பிற நேரங்களை பயன்படுத்தி கொள்வதிலும் தவறில்லை.
அட்சய திருதியை நாளில் பொருட்கள் வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை நமக்கு பெற்று தரும் என்பது நம்பிக்கையாகும்.
என்னென்ன செய்யலாம்?
மேலே சொன்னபடி இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அணிகலன்கள் தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிற்கு தேவையான திரைச்சீலைகள் தொடங்கி ஏதேனும் உபயோகப் பொருட்கள், வாகனங்கள், ஆடைகள் என பொருட்களை வாங்கலாம்.
அதேசமயம் ஏழை எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை இந்நாளில் செய்யலாம். மேலும் புத்தகங்கள், உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசுகள் என அனைத்தும் வாங்கலாம்.
கடவுள் வழிபாடு
அட்சய திருதியை நாளில் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடலாம். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூர் பெருமாள் கோயில், கும்பகோணத்தில் உள்ள 16 பெருமாள் கோயில்கள், திருச்சி வெள்ளூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோயில், சேலம் எட்டிக்குட்டைமேடில் உள்ள ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருக்கோயில் போன்ற வழிபாட்டு தலங்களில் வழிபடலாம். இயலாதவர்கள் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடலாம்.