Tata Tiago Tiago EV: புதுசா..தினுசா.. கூடுதல் அம்சங்களுடன் டாடா டியாகோ ஈவி.. என்னென்ன இருக்கு? புதிய விலை?
Tata Tiago Tiago EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா டியாகோ மின்சார காரின், மேம்படுத்தப்பட்ட எடிஷன் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tata Tiago Tiago EV: மேம்படுத்தப்பட்ட டாடா டியாகோ மின்சார காரின் விலை விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா டியாகோ ஈவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனம் டியாகோவின், 2025ம் ஆண்டிற்கான எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் தொடக்க விலை ரூ. 4.99 லட்சம் ஆகவும், டாப்-ஸ்பெக் எக்ஸ்இசட்+ விலை ரூ.7.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் இந்த எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சில வகைகளில் கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. ஸ்டேண்டர்ட் டாடா டியாகோவுடன் , டாடா மோட்டார்ஸ் Tiago CNG மற்றும் Tiago EV வரிசையையும் மேம்படுத்தியுள்ளது. முழு Tiago ரேஞ்சிலும் காஸ்மெடிக் மற்றும் அம்ச சேர்க்கைகள் மட்டுமே நடபெற்றுள்ளன. இயந்திர மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
2025 டாடா டியாகோ இன்டீரியர், அப்டேட்கள்:
கிரில் மற்றும் ஏர் டேம் ஆகியவை டாடாவின் மற்ற கார்களுக்கு ஏற்ப, வடிவமைப்பைக் கொண்டு வர சிறிய மாற்றங்களைப் பெறுகின்றன. மேலும் டாப் வேரியண்ட்களில் ஷார்க் ஃபின் ஆண்டெனா கிடைக்கும். அரிசோனா ப்ளூ, சூப்பர்நோவா காப்பர், ஓஷன் ப்ளூ மற்றும் பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய 4 புதிய வண்ண ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. "மெலஞ்ச் ஃபேப்ரிக்" அப்ஹோல்ஸ்டரியும் இதில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. புதிய டாடா கார்களில் காணப்படும் ஒளிரும் ஸ்டீயரிங்கையும் இந்த கார் பெற்றுள்ளது. எக்ஸ்எம் பெட்ரோல் வேரியண்டின் கூடுதல் அம்சங்களில் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் புதிய வீல் கவர் வடிவமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பெட்ரோல் எடிஷனின் விலை ரூ.5.70 லட்சமாகவும், சிஎன்ஜி எடிஷனின் விலை ரூ.6.70 லட்சமாகவும் உள்ளது.
வேரியண்ட்களும், விலை விவரங்களும்:
Tiago XT வேரியண்ட் ஆனது ரிவர்ஸ் கேமராவுடன் 7-இன்ச் தொடுதிரையைப் பெறுகிறது. ஒயர்ட் ஆப்பிள் கார்பிளே மற்றும் Android Auto, ESP மற்றும் ஹில் ஹோல்ட், 14-இன்ச் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள் மற்றும் பின்புற டிஃபாகர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. டியாகோ எக்ஸ்டியின் விலை பெட்ரோல் எடிஷனுக்கு ரூ.6.30 லட்சமாகவும், சிஎன்ஜி எடிஷனின் விலை ரூ.7.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ எக்ஸ்இசட் வேரியண்டின் பெட்ரோல் எடிஷனின் விலை ரூ.6.90 லட்சம் மற்றும் சிஎன்ஜி எடிஷனின் விலை ரூ.7.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் HD ரிவர்ஸ் கேமராவுடன் புதிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரையை புதியதாக பெற்றுள்ளது. இது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய 4 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே மற்றும் 15 இன்ச் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான Tiago NRG ஒற்றை XZ டிரிமில் வருகிறது. இது ஸ்டேண்டர்ட் Tiago XZ போன்ற அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. டியாகோ என்ஆர்ஜி எக்ஸ்இசட் காரின் தொடக்க விலை பெட்ரோல் எடிஷனுக்கு ரூ.7.20 லட்சமாகவும், சிஎன்ஜி எடிஷனுக்கு ரூ.8.20 லட்சமாகவும் உள்ளது.
XZ வேரியண்டின் அம்சங்களுக்கு மேலாக, XZ+ ஆனது 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், முன் பனி விளக்குகள், பின்புற வைப்-வாஷ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் TPMS போன்றவற்றைப் பெறுகிறது. டாப்-ஸ்பெக் 2025 Tiago XZ+ விலைகள் ரூ.7.30 லட்சத்தில் தொடங்குகின்றன.
Tiago பெட்ரோல் மற்றும் CNG போன்றே, Tiago EV ஆனது 2025 மாடல் ஆண்டிற்கான அப்டேட்களை பெற்றுள்ளது. Tiago EV க்கான ஆரம்ப நிலை XE MR வேரியண்டின் விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது, டாப்-ஸ்பெக் டெக் லக்ஸ் LR விலை ரூ.11.44 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.