ஒரே கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி - நல்ல மகசூல், வருவாய் ஈட்டும் விவசாயிகள்
ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 5 கிலோ சாமை விதைத்தால், 700 முதல் 1000 கிலோ வரை சாமை மகசூல் கிடைத்துள்ளது. மேலும் பராமரிப்பு செலவு தண்ணீர் குறைவு என்பதால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது.

தருமபுரி அருகே ஒரே கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி செய்து நல்ல மகசூல் மற்றும் வருவாய் ஈட்டி வரும் விவசாயிகள். விதை மற்றும் உயிர் உரங்களை அரசே மானியத்தில் வழங்குவதால், மேலும் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாக சிறுதானியங்கள் அதிக பயிரிடும் மாவட்டமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், சிறுதானியங்களில் சாகுபடி பரப்பு கடுமையாக குறைந்து வந்தது. இந்த நிலையில் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள், சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ராகி, கம்பு, சோளம், சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதற்கு அரசே மானியத்தில் விதை மற்றும் உயிர் உரங்கள் வழங்குவது குறித்து ஆங்காங்கே முகாம்கள் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி அடுத்த கோணங்கிநாயக்கனள்ளி ஊராட்சியில் வேளாண்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் பலன் குறித்து எடுத்துரைத்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு பத்து விவசாயிகள் சாமை சாகுபடி செய்துள்ளனர்.
மேலும் விவசாயிகளுக்கு சாமை மற்றும் உயிர் உரங்களை அரசு மானிய விலையிலும் கொடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் சாமை பயிரிட அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 5 கிலோ சாமை விதைத்தால், 700 முதல் 1000 கிலோ வரை சாமை மகசூல் கிடைத்துள்ளது. மேலும் பராமரிப்பு செலவு தண்ணீர் குறைவு என்பதால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோணங்கிநாய்க்கனள்ளி கிராமத்தில் பத்து விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாமை சாகுபடி செய்துள்ளனர். இதில் விவசாயிகளுக்கு நல்ல மகசூலுடன், ஏக்கருக்கு 900 கிலோ சாமை கிடைத்துள்ளது. இதனால் சந்தையில் ஒரு கிலோ சாமை 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
மேலும் பல்வேறு வகையான விவசாயம் செய்து மழை இல்லாததால் லாபம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தண்ணீர் மற்றும் பராமரிப்பு செலவு குறைவால் நல்ல மகசூல் மற்றும் வருவாய் கிடைத்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இந்த விவசாயிகளைப் பார்த்து அருகில் உள்ள விவசாயிகளும் இந்தாண்டு சாமை சாகுபடி செய்வதற்காக முன்வந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்திற்கு ஏற்ற பயிராக இருக்கும் நிலையில் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. ஆனால் விலை மட்டும் விவசாயிகளிடம் குறைந்த அளவிற்கு வாங்கப்படுகிறது. கூடுதலாக விலை கிடைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

