தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம் | Pakistan Peshawar Blast
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் எல்லைப் படை தலைமையகத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தற்கொலைத் கோரத் தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளால் அப்பகுதியே அதிர்ந்ததுள்ளது. இந்தத் தாக்குதலில், இதுவரை மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவரில் உள்ள ஃபெடரல் கான்ஸ்டபுலரி (Federal Constabulary) தலைமையகத்தில் நிகழ்ந்துள்ளது. அதிகாலை, தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் இந்த வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர்.
முதன்முதலில், முதல் தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபர், தலைமையகத்தின் மேயின் கேட்டில் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாவது பயங்கரவாதி வளாகத்தினுள் நுழைய முயற்சி செய்தபோது, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் பலத்த துப்பாக்கிச் சண்டை சத்தம் கேட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த தகவல் கிடைத்தவுடன், பாகிஸ்தான் ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் அப்பகுதிக்கு விரைந்து தலைமையகத்தின் பகுதியை முழுவதுமாகச் சுற்றி வளைத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும் உறுதியில் இருந்து பாகிஸ்தானைப் பிரிக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





















