அக்கா மீது செருப்பு வீச்சு! எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
குடும்பத்தையும், அரசியலையும் விட்டு பிரிவதாக லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார். தேஜஸ்வி யாதவுக்கும் ரோகினிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும், அவர் தனது அக்காவை செருப்பால் அடிக்க ஓங்கியதாவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர் சஞ்சய் யாதவிற்கு கட்சியில் செல்வாக்கு அதிகரிப்பதால் அவரது சகோதரி ரோகினி ஆச்சார்யா கடுப்பில் இருந்ததாக பேசப்பட்டது. லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவை எக்ஸ் தளத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார் ரோகினி. அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டு தனது தந்தைக்கு ரோகினி சிறுநீரகம் தானம் செய்திருந்தார். அது வேறு ஒருவருடைய சிறுநீரகம் என்ற விமர்சனமும் வந்தது. இதனால் கோபமான அவர், நான் எனது தந்தைக்கு சிறுநீரகத்தை வழங்கியது பொய் என யாராவது நிரூபித்தால் நான் அரசியலில் இருந்தே விலகிக் கொள்கிறேன் என சவால்விட்டுள்ளார். அப்படி இல்லையென்றால் இப்படி பேசியவர்களும், அவர்களை பேச சொன்னவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்தார். தேஜஸ்வி யாதவின் குடும்ப பிரச்னை பீகார் தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்தது. குடும்ப பஞ்சாயத்தை முடிக்காமல் ஆட்சியை பிடிக்க ஆசையா என்று எதிர் தரப்பினர் விமர்சித்தனர்..
இந்தநிலையில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது ராஷ்டிரிய ஜனதா தளம். 143 இடங்களில் போட்டி போட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு ரோகினி ஆச்சார்யா தான் காரணம் என தேஜஸ்வி யாதவ் அவரது பக்கம் திருப்பி விட்டதாக சொல்கின்றனர். இதனை தொடர்ந்து தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கமானவர்கள் அரசியலை விட்டு விலக சொன்னதாகவும், அவர்கள் சொன்னது போலவே குடும்பத்தையும் அரசியலையும் விட்டு விலகுவதாக சொல்லி பரபரப்பை கிளப்பினார்.
இந்தநிலையில் தன்னை நோக்கி செருப்புகள் ஓங்கப்பட்டதாக பகீர் கிளப்பும் வகையில் சோசியல் மீடியாவில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அதில் ”நேற்று ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமதிக்கப்பட்டார். மோசமான வார்த்தைகள் பேசி என்னை அடிக்க செருப்பை கையில் எடுத்தனர். நான் என் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. என்னை அவமானப்படுத்தினார்கள். ஒரு மகள் கட்டாயத்தின் பேரில் அழுதுகொண்டிருந்த பெற்றோரை விட்டுவிட்டு வந்தாள். அவர்கள் என்னை என் தாய் வீட்டிலிருந்து பிரித்து விட்டார்கள். என்னை அனாதை ஆக்கிவிட்டார்கள். எந்த குடும்பத்திற்கும் ரோகினி போன்ற மகளோ சகோதரியோ இருக்கக் கூடாது” என உடைந்து பதிவிட்டுள்ளார். வாக்குவாதத்தில் தேஜஸ்வி யாதவ் தான் செருப்பை ஓங்கியதாக பீகார் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
அதேபோல் கோடிக்கணக்கான பணத்தையும், மக்களவை தேர்தலில் சீட்டும் வாங்கிவிட்டு தான் நான் எனது தந்தைக்கும் சிறுநீரகம் தானம் செய்ததாக விமர்சிக்கிறார்கள் என ரோகினி ஆச்சார்யா வருத்தத்துடன் பேசியுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ரோகினி ஆச்சார்யா தோல்வியடைந்தார். இதனை வைத்து தான் சீட் வாங்கி கொண்டு அவர் சிறுநீரகம் செய்ததாக தேஜஸ்வி யாதவ் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர்.
ஏற்கனவே படுதோல்வியால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் உடைந்து போயுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்குள் வெடிக்கும் பிரச்னை கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.





















