நீங்கள் வாங்கும் நிலத்திற்கு தாய் பத்திரம் இல்லையா ? நிலம் வாங்குவதில் சிக்கல் !! தீர்வு என்ன ?
தாய் பத்திரம் இல்லாத சொத்துக்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்வென்று பார்ப்போம்

சட்ட ரீதியான சிக்கல் - அதிக கவனம்
ஒரு சொத்து பல நபர்களிடம் இருந்து மாறி வரும் போது அதன் ஆரம்ப கால உரிமையாளரிடம் இருந்து தற்போது விற்பவர் வரை ஏற்பட்ட அனைத்து உரிமை மாற்றங்களையும் உறுதிப்படுத்தும் தொடர்பை தான் தாய் பத்திரம் என்று அழைப்பார்கள்.
இந்த பத்திரம் இல்லாத பட்சத்தில் நீங்கள் வாங்கும் நிலம் எதிர் காலத்தில் சட்ட ரீதியான சிக்கல்களையும் கடுமையான பொருளாதார இழப்புகளையும் உங்களுக்குத் தரக் கூடும் என்பதால் இதில் அதீத கவனம் தேவைப்படுகிறது.
தாய் பத்திரம் இல்லாமல் ஒரு நிலத்தை வாங்கும் போது அதன் உரிமையாளரின் உண்மையான அதிகாரம் குறித்து சந்தேகம் எழும். அந்த நிலத்தின் மீது ஏற்கனவே யாராவது கடன் வாங்கியிருக்கலாம் அல்லது அந்த நிலம் வாரிசு தாரர்களுக்கு இடையிலான நீதிமன்றப் பிரச்சனையில் சிக்கியிருக்கலாம்.
சொத்து மதிப்பு குறையும்
உண்மைகளை மறைத்து உங்களிடம் அந்த நிலம் விற்கப்பட்டால் பிற்காலத்தில் அந்த நிலத்தின் மீது உரிமை கோரி எவராவது வந்தால் சட்டப்படி உங்களால் அந்தச் சொத்தை முழுமையாகப் பாதுகாக்க முடியாமல் போகும். மேலும் ஒரு வங்கியானது முறையான தாய் பத்திரம் இல்லாத பட்சத்தில் அந்த நிலத்திற்கு கடன் வழங்க எப்போதும் முன் வராது என்பதால் எதிர் காலத்தில் நீங்கள் அந்த நிலத்தை விற்க முற்படும் போது அதன் மதிப்பு வெகுவாகக் குறையும்.
பல நேரங்களில் ஒரு சொத்து அடமானத்தில் இருக்கும் போது தான் அதன் அசல் பத்திரம் வங்கியில் இருக்கும் என்பதால் அந்த தகவலை மறைத்து விற்பவர்கள் தாய் பத்திரம் காணவில்லை என்ற பொய்யான காரணத்தைச் சொல்லவும் வாய்ப்புள்ளது.
30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்
ஒரு வேளை உங்களுக்கு அந்த நிலம் மிகவும் பிடித்து விட்டது ஆனால் தாய் பத்திரம் மட்டும் இல்லை என்ற நிலையில் நீங்கள் சில முக்கியமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சம்பந்தப்பட்ட நிலத்தின் கடந்த 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழை எடுத்து அதில் எந்த விதமான சட்ட சிக்கலோ அல்லது அடமானமோ இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கண்டுபிடிக்க முடியவில்லை - சான்றிதழ்
அந்த நிலத்தின் உரிமையாளர் மூலமாக அந்த பத்திரம் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதற்கான ரசீது மற்றும் "கண்டுபிடிக்க முடியவில்லை " என்ற சான்றிதழைப் பெற வேண்டும்.
இது மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் இரண்டு முன்னணி நாளிதழ்களில் அந்த தாய் பத்திரம் தொலைந்து விட்டது என்றும் அந்த நிலத்தை வாங்க நான் ஒப்பந்தம் செய்துள்ளேன் என்றும் ஒரு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பு வெளியான பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
தாய் பத்திரம் நகல்
சார் பதிவாளர் அலுவலகத்தில் தாய் பத்திரம் நகலுக்கு விண்ணப்பித்து அதன் நம்பகத் தன்மையை சரி பார்க்க வேண்டும். ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் சான்றளிக்கப்பட்ட நகல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும். ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை கொண்டு நிலத்தின் அனைத்து முந்தைய ஆவணங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.























