”வன்மத்தை கக்காதீங்க” புலம்பி தள்ளிய ராஜ்மோகன்! பங்கம் செய்த நெட்டிசன்கள்
யாருமே தேடாமல் ராஜ்மோகன் தலைமறைவாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் மீம்கள் குவிந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு கரூர் விவகாரம் தொடர்பாக மௌனத்தை கலைத்துள்ளார் ராஜ்மோகன்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ, தவெக நிர்வாகிகளோ கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருப்பது விமர்சனத்தில் சிக்கியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் என கட்சியில் ஆக்டிவ்வாக இருந்தவர்கள் தற்போது வெளியே தலைகாட்டாமல் இருந்து வருகின்றனர்.
புஸ்ஸி ஆனந்தையாவது போலீசார் தேடுவதால் தலைமறைவாக இருக்கிறார், ஆனால் யாருமே தேடாமல் ராஜ்மோகன் ஏன் தலைமறைவாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் மீம்கள் குவிய ஆரம்பித்தன. இந்தநிலையில் கரூர் விவகாரத்தில் 11 நாட்களுக்கு பிறகு தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மௌனம் கலைத்துள்ளார்.
இதுதொடர்பான அவரது பதிவில், ‘வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி. இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.





















