‘முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்தும் ஒபிஎஸ்..!
’மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள திமுக இணைப்பு நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமியையும் ஆர்.பி. உதயகுமாரையும் கடுமையாக விமர்சித்து பேச ஒபிஎஸ் திட்டமிட்டுள்ளார்’

கள்ளர், மறவர், அகமுடையார் என்ற முக்குலத்தோர் சமூகம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு ஆதரவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை விட்டே ஜெயலலிதாவின் சகோதரிபோல இருந்த சசிகலா நீக்கப்பட்ட பின்னர் அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களின் வாக்குகளை அப்படியே திமுக பக்கம் மாற்றுவதற்கு பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வந்தன.
கருணாஸை தன் பக்கம் கொண்டுவந்த திமுக
அரசியல் ரீதியாக முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸை தன் பக்கம் கொண்டு வந்தது திமுக. அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா, சசிகலாவா எம்.எல்.ஏ ஆன கருணாஸ், திமுக கூட்டணிக்கு வந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அதோடு, டெல்டா மாவட்டத்தில் செல்வாக்காக இருக்கும் ஸ்ரீதர் வாண்டையாரும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இதமூலம் முக்குலத்தோர் சமூகத்தின் பார்வை திமுகவை நோக்கித் திரும்பின. எடப்பாடி பழனிசாமி சசிகலாவிற்கு செய்த துரோகத்தை முக்குலத்தோருக்கே செய்ததாக அந்த சமூகம் நினைக்கத் தொடங்கிய நிலையில், அதே சமூகத்தை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரான ஒ.பன்னீர்செல்வத்தையும் கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இது தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் இடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தங்களது சமூகத்திற்கு அரசியல் ரீதியாக இழைக்கப்பட்ட பெரும் அநீதியாக முக்குலத்தோர் சமூகம் நினைக்க இந்த நடவடிக்கையும் முக்கிய காரணமாக அமைந்தது.
திமுகவில் ஐக்கியமான ஒ.பன்னீர்செல்வம்
இந்நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒ.பன்னீர்செல்வத்தை திமுகவில் இணைத்ததன் மூலம் முக்குலத்தோர் சமூக மக்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திருப்பிக்காட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், அதிமுகவின் அடித்தளமான முக்குலத்தோர் வாக்கு வங்கியை திமுக பக்கம் மொத்தமாக மாற்றிவிட அவர் போட்ட கணக்கு கனக்கச்சிதமாக முடிந்திருக்கிறது என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வை.
திமுவில் இணையும் விழாவை நடத்தும் ஒபிஎஸ்
இந்நிலையில், நாளை மறுதினம் மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவரக்கோட்டையில் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து வருகிறார் ஒ.பன்னீர்செல்வம். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த இணைப்பு மாநாட்டில், எடப்பாடி பழனிசாமியையும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமாரையும் கடுமையாக விமர்சித்து பேச ஒபிஎஸ் திட்டமிட்டு வருவதாகவும், அவர்களை முக்குலத்தோர் சமூகத்தின் துரோகியாக அடையாளப்படுத்தி பேச அவர் தயாராகி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தன்னை ஓரங்கட்ட முக்கிய காரணமாக இருந்த முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஆர்.பி. உதயகுமாரை குறிவைத்து இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு ஒபிஎஸ் ஏற்பாடு செய்துள்ளார். அதனால்தான், உதயகுமாரின் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவைத்து திமுகவில் தனது ஆதரவாளர்களை இணைக்க ஒ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















