விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
ராகுல்காந்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேச்சு அடிபட்ட நிலையில், திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாக பெருமிதத்துடன் பாராட்டியுள்ளார் ப.சிதம்பரம்.
விஜய் தவெகவை தொடங்கியதில் இருந்தே கூட்டணி பற்றிய விவாதங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவுடன் கைகோர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் சொன்னது கூட்டணி கணக்குகளுக்கு கை கொடுத்தது. ஆனால் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் தவெகவுடன் இன்னும் எந்த கட்சிகளும் இணையவில்லை.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கரூர் துயர சம்பவம் சமயத்தில் விஜய்க்கு ஆறுதல் சொன்னதாகவும் அதனை தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. திமுகவை விட்டுவிட்டு தவெக பக்கம் சாய்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருவதாக எதிர் தரப்பினரும் விமர்சனம் செய்தனர்.
இந்தநிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்தலை கருத்தில் கொண்டு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில்,அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் இதுதொடர்பான பதிவில், ‘தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.





















