Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ நெத்தியடி பதில்!
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லீ. தொடர்ந்து தெறி , மெர்சல் , பிகில் என விஜயுடன் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த அட்லீ அப்படியே பாலிவுட் பக்கம் திரும்பினார்.
ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை ஆட்டம் காண செய்தார். அட்லீயின் படங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இந்திய சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார் அட்லீ. தற்போது இந்தியில் வருன் தவான் நடித்துள்ள தெறி படத்தின் ரீமேக் பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்க இருக்கிறார். பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனுக்காக அட்லீ பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி கபில் ஷர்மா ஷோவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அட்லீயிடம் அவரது தோற்றம் தொடர்பாக கபில் ஷர்மா கேட்ட கேள்வி ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
" இவ்வளவு இளம் வயதில் நீங்கள் ஒரு பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறீர்கள். எப்போதாவது நீங்கள் ஒரு பெரிய ஸ்டாரை சந்திக்கச் சென்று அவர் உங்களை நீ தான் அட்லீயா என்று கேட்டிருக்கிறார்களா? என்று கபில் ஷர்மா அட்லீயிடம் கேள்வி கேட்டார்.
" நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸூக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனால் அவர்தான் என் முதல் படத்தை தயாரித்தார். நான் பார்க்க எப்படி இருக்கிறேன். என்னால் இதை செய்ய முடியுமா என்று எல்லாம் அவர் யோசிக்கவில்லை. அவருக்கு நான் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. ஒருவரின் தோற்றத்தை வைத்து நான் அவரை மதிப்பிடக் கூடாது. ஒருவரின் இதயத்தை வைத்துதான் நீங்கள் அவரை மதிப்பிட வேண்டும் " என அட்லீ அவரது கேள்விக்கு பதிலளித்தார்.
அட்லீ பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து இவ்வளவு பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தும் இந்த மாதிரியான கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என பலர் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கபில் ஷர்மாவை விமர்சித்து வருகிறார்கள்