Survivor show : அர்ஜூனின் SURVIVOR SHOW.. லிஸ்டில் இவர்களா?
திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது சின்னதிரை பக்கம் வருகின்றனர். ஒரு சிலரோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
கமல் ஹாசன் தொடங்கி சூர்யா, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்போது புதிதாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார். ஆம்... ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெயர் போன அர்ஜுன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகவுள்ள, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். 90 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு தீவில் நடைபெறவுள்ளது.
18 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அந்த தீவில் தங்க வைக்கப்படுவார்கள். கடுமையாக நடைபெறும் சாவல்களைக் கடந்து, யார் தங்களது பயணத்தைத் தீவில் வெற்றிகரமாக முடிகிறார்களோ அவர்களே , சர்வைவர் நிகழ்ச்சியில் வின்னராக தேர்வு செய்யப்படுவார். இதற்காக 90 நாட்களுக்கு அர்ஜுன், போட்டியாளர்களுடன் ஒரே தீவில் தங்க உள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெல்லப்போகும் நபருக்கு 1 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என்றும், தொலைபேசி இல்லாமல் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும், ப்ரோமோ மூலம் தெரிகிறது. அதேபோல் அர்ஜுன் அதில், “உழைத்தால்தான் பிழைக்க முடியும்.
போராட்டம் இல்லாமல் எதை நாம் இங்கே சாதித்துக் காண்பிக்க முடியாது” என பேசும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாதம் இறுதி அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜய்குமார், விக்ராந்த், நந்தா, ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜா சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ ரெட்டி, சஞ்சனா சிங், தொகுப்பாளினி பார்வதி, ஷாலு ஷம்மு, ஜான் விஜய், கோபிநாத் ரவி மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த பட்டியலில் இருக்கும் ஒருவர் கூட இந்த செய்தியை உறுதி செய்யாததால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதேபோல் 100 நாட்களைக் கொண்டது. சீசன் 5 அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில் எந்த நிகழ்ச்சியைக் காண்பது என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருப்பார்கள்.
முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக வெளியாகும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி, போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.