பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது பெங்களூர்
சென்னையில் நேற்று நடைபெற்ற முதல் ஐ.பி.எல். ஆட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
14வது ஐ.பி.எல். தொடருக்கான முதல் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. 5 முறை சாம்பியனான ரோகித் சர்மாவின் மும்பை அணியும், கோப்பையை முதல் முறையாக கைப்பற்ற வேண்டும் என்ற தாகத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்ற விராட் கோலி, மும்பை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் ஆட்டத்தை தொடங்கினர். 15 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சேர்த்திருந்த ரோகித் சர்மா ரன் அவுட் ஆகினார். பின்னர், கிறிஸ் லின் 49 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்னும், இஷான் கிஷான் 28 ரன்களும் சேர்த்தனர். ஹர்திக் பாண்ட்யா 13 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்திருந்தது. பெங்களூர் அணியில் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, வாஷிங்டன் சுந்தரும், விராட் கோலியை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களிலும், அடுத்து வந்த ராஜத் படிதர் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கிளன் மேக்ஸ்வேல்- விராட் கோலி ஜோடி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு சென்றது. விராட் கோலி 29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
இதையடுத்து, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல்லும் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, பின்வரிசை வீரர்களுடன் இணைந்து அணியின் வெற்றிக்காக ஏபி டிவிலியர்ஸ் தனி ஆளாக போராடினார். ஷபாஸ் அகமத் 1 ரன், டேனியல் கிறிஸ்டியன் 1 ரன், கைல் ஜேமிசன் 4 ரன் என்று அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஆனால், ஒற்றை ஆளாக போராடிய ஏபி டிவிலியர்ஸ் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 47 ரன்களை குவித்தார். வெற்றிக்கு 3 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், 2வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய ஏபி டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆனார்.
டிவிலியர்ஸ் ஆட்டமிழந்த பிறகே, மும்பை வீரர்கள் நிம்மதி மூச்சு விட்டனர். ஆனால், அவர்கள் நிம்மதி மூச்சு நீண்டநேரம் நீடிக்கவில்லை. இறுதியில் பெங்களூர் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. முகமது சிராஜ் பைஸ் முறையில் ஒரு ரன்னும், ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இரு அணிகளும் முழுவதும் 20 ஓவர்கள் விளையாடிய இந்த ஆட்டம் பரபரப்பாகவே சென்றது. ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.