Pakistan PM Shehbaz Sharif: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
இந்தியாவை வீழ்த்துவதே பாகிஸ்தான் வீரர்களின் உண்மையான பணி என அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் கூறியுள்ளார். அவர் எதைப்பற்றி கூறினார் என்று தெரியுமா.?

19-ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி தொங்குகிறது. இதில், உலகின் டாப் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்கின்றன. அதில், ‘ஏ‘ பிரிவில் வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி‘ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக அணிகள் இம்பெற்றுள்ளன. 12 குரூப் போட்டிகளுக்குப்பின், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியிலும், அதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டியிலும் விளையாடும். இறுதிப் போட்டி மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
முதன் முறையாக நடத்தும் பாகிஸ்தான்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே, முதன் முறையாக தங்கள் நாட்டில் போட்டிகளை நடத்துகிறது பாகிஸ்தான். இதற்காக, அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் பல கோடி ரூபாய் செலவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட மைதானங்களை அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் திறந்து வைத்து வருகிறார். இந்த தொடரில், பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்தியா பங்குபெறும் போட்டிகள் மட்டும், துபாயில் நடைபெற உள்ளன.
இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி - ஷெபாஸ் பேச்சு
இந்நிலையில், நேற்று(07.02.25) இரவு, லாகூரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கடாபி மைதானத்தை அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் திறந்து வைத்தார். அந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் பேசிய அவர், சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, சாம்பியன்ஸ் டிராஃபியை வெல்வதை விட, கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முக்கிய எதிரியான இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி என அவர் தெரிவித்தார். 2017-ல் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நடப்பு சாம்பியனாக களமிறங்கும் பாகிஸ்தான் அணி, இந்த முறையும் இந்தியாவை மண்ணை கவ்வ வைத்து, 24 கோடி பாகிஸ்தான் மக்களின் இதயங்களை ரிஸ்வான் தலைமையிலான அணி வெல்லும் என நம்புவதாகவும் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, வரும் 23-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்த போட்டியில், பாகிஸ்தானை இந்தியா பழி தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

