WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
WPL Final 2025 DC vs MI: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

WPL Final 2025 DC vs MI: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் வென்று மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகளிர் பிரீமியர் லீக் ஃபைனல்:
மகளிர் பிரீமியர் லீகின் மூன்றவாது எடிஷன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் டெல்லி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேநேரம், மும்பை அணி எலிமினேட்டரில் குஜராத் அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை மீண்டும் வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? அல்லது முதல் எடிஷனின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிவாங்கி, டெல்லி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதனால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை Vs டெல்லி - எங்கு? எப்போது? நேரலை விவரம்:
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் கண்டுகளிக்கலாம்.
அதகளம் செய்யும் நட்சத்திரங்கள்:
மும்பை: மும்பை அணியின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் இந்த சீசனில் ஒட்டுமொத்த எடிஷனின் நட்சத்திர வீராங்கனைகளான உள்ளனர். ஒன்பது இன்னிங்ஸ்களில் 493 ரன்கள் எடுத்து 70.43 என்ற வியக்கத்தக்க சராசரியுடன் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் ஸ்கைவர்-பிரண்ட் முதலிடம் வகிக்கிறார். மேத்யூஸ் அதிக விக்கெட்டுகளுடன் (17) பர்பிள் கேப்பை தன்வசம் வைத்துள்ளார். மும்பையின் அமெலியா கெர் 16.38 சராசரியுடன் 16 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
டெல்லி: டெல்லி அணிக்காக, பேட்டிங்கில் அதிரடி காட்டும் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, இந்த சீசனில் 300 ரன்கள் எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து கேப்டன் லானிங் 263 ரன்கள் எடுத்துள்ளார். டிசி அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் ஷிகா பாண்டே மற்றும் ஜெஸ் ஜோனாசென். இருவரும் தலா 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
மும்பை Vs டெல்லி: நேருக்கு நேர்:
இதுவரை இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 3 முறயும், டெல்லி அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் இரு அணிகளும் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும், டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே வெற்றியை இறுதிப்போட்டியிலும் வெல்ல டெல்லி அணி ஆர்வம் காட்டுகிறது.
உத்தேச பிளேயிங் லெவன்:
மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), சஜீவன் சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், ஜி. கமாலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனாசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், மரிசான் கப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது
மைதானம் எப்படி?
மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு உகந்த மேற்பரப்புக்கு பெயர் பெற்றது. ரசிகர்கள் ஃபிளாட் ட்ராக்கை எதிர்பார்க்கலாம், அதிக ஸ்கோர்கள் குவிக்க வாய்ப்பு இருக்கும். வரலாற்று ரீதியாக, முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இந்த மைதானத்தில் அதிக வெற்றி வாய்ப்புகளை பெற்றுள்ளன. இதனால் டாஸ் ஒரு முக்கியமான காரணியாக அமைகிறது. WPL 2025 இல், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
வானிலை அறிக்கை:
மார்ச் 15 ஆம் தேதி மும்பையில் வானிலை தெளிவாக இருக்கும் என்றும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன . அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 24 டிகிரியாகவும் குறையும். எனவே இன்றைய மும்பை மற்றும் டெல்லி இடையேயான போட்டி, எந்தவித மழை குறுக்கீடும் இன்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

