Vinesh Phogat: ”வினேஷ் போகத் முன்பு சரிந்த அதிகார அமைப்பு” அன்று வீதியில், இன்று சர்வதேச மேடையில் - ராகுல் காந்தி
Vinesh Phogat: வினேஷ் போகத் முன்பு ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் சரிந்துள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Vinesh Phogat: விமர்சனங்களுக்கு வெற்றிகள் மூலம் வினேஷ் போகத் பதிலடி தந்துள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
வரலாறு படைத்த வினேஷ் போகத்:
பாரீஸ் ஒலிம்பிக் நேற்று மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில், இந்தியா சார்பில் வினேஷ் போகத் பங்கேற்றார். அதில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில், உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சை, 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் சாய்த்தார். அரையிறுதியில், கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல், இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை வினேஷ் போகத் நிகழ்த்தினார்.
एक ही दिन में दुनिया की तीन धुरंधर पहलवानों को हराने के बाद आज विनेश के साथ-साथ पूरा देश भावुक है।
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2024
जिन्होंने भी विनेश और उसके साथियों के संघर्ष को झुठलाया, उनकी नीयत और काबिलियत तक पर प्रश्नचिन्ह खड़े किए, उन सभी को जवाब मिल चुका है।
आज भारत की बहादुर बेटी के सामने सत्ता का… pic.twitter.com/MzfIrYfRog
வினேஷ் போகத் முன்பு சரிந்த அதிகாரம் - ராகுல் காந்தி:
வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வீழ்த்தி வினேஷ் உடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சிவசப்பட்டது. வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் எண்ணம் மற்றும் திறன்களைக் கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் அவர்களுக்கான பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று அவரது வீர மகளின் முன் சரிந்தது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்:
பாஜக முன்னாள் எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. ஏராளமான மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வினேஷ் போகத்தும் அடங்குவர். அப்போது, வினேஷ் போகத் போன்றோர் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச போட்டியில் பங்கேற்க திறனற்றவர்கள் எனவும், பாஜகவினர் கடுமையாக சாடினர். இந்நிலையில் தான், வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
வினேஷ் போகத் குடும்பத்தினர் பெருமிதம்:
வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து பேசிய வினேஷ் போகத்தின் மாமா மகாவிர் போகத், “அவர் தங்கப் பதக்கம் வெல்வார். இந்த வெற்றி, அவளைப் பற்றி தவறாகப் பேசியவர்களின் முகத்தில் அறைந்த அடி” என தெரிவித்துள்ளார்.