Keshav Maharaj Record: 60 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்கா: அசத்திய இந்தியா வம்சாவளி பவுலர்!
கடந்த 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிரிஃபின் முதன்முதலில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அதன்பிறகு, கேஷவ் மகராஜ் வீழ்த்தியுள்ளார். அதன் பின் தற்போத தான் ஹாட்ரிக் எடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் இந்திய வம்சாவளி கேஷவ் மகராஜ்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 298 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்களில் சுருண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய தென்னாப்பிரிக்கா 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், தென்னாப்பிரிக்கா 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஆட்டத்தின் 37ஆவது ஓவரில் கீரன் பவுல் (51), ஜேசன் ஹோல்டர் (0), ஜோஸ்வா டா சில்வா (0) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை பெற்றார். 60 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மேலும், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் கேசவ் மகராஜ் படைத்துள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிரிஃபின் முதன்முதலில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மகராஜ் 36 ரன்களை விட்டுக்கொடுத்து மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Keshav Maharaj's hattrick.#WIvSA pic.twitter.com/d7WbfztM9Y
— Darpan Jain (@darpanjain103) June 21, 2021
"ஹாட்ரிக் பந்தை வீசுவது தொடர்பாக தலையில் பல விஷயங்கள் இருந்தன. இறுதியில் நான் சாதாரணமாக பந்துவீசி ஹாட்ரிக்கை எடுத்தேன். ஹாட்ரிக்கை எடுத்த உடன் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னுள் அதிக உற்சாகம் இருந்தது” என்று மகராஜ் கூறினார். தென்னாப்பிரிக்க அணியில் இதுவரை எத்தனையோ புகழ் பெற்ற பவுலர்கள் இருந்துள்ளனர். நிறைய விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். ஆனால், இந்த ரிக்கார்டு முறியடுக்க அவர்களுக்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. தற்போது அதை நிறைவேற்றியிருக்கும் மகராஜூவுக்கு பாராட்டு மழை கொட்டி வருகிறது.