Yuvraj Singh on Jadeja: சீரியஸாக போஸ்ட் போட்ட ஜடேஜா.. கலாய்த்து தள்ளிய யுவராஜ் சிங்.. ரியாக்ஷன் என்ன தெரியுமா?
Yuvraj Singh on Jadeja: ஜடேஜாவின் டிவிட்டர் பதிவுக்கு யுவராஜ் சிங்கின் பதில் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.
Yuvraj Singh on Jadeja: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா இடையேயான உரையாடல் டிவிட்டர் பக்கத்தினை நிரப்பியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிக்கு முன்னர் ஜடேஜா தனது பயிற்சியின் படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் - அதில் நான் எதையும் அவ்வளவு சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்வது இல்லை என கேப்ஷனிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு யுவராஜ் "உங்கள் சிகை அலங்காரம் தவிர, சார்" என்று கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். இவர்களது இந்த பதிவு அவர்களைப் டிவிட்டரில் பின் தொடருபவர்களிடையே உரையாடலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்களும், துருவ் ஜூரல் 34 ரன்களும் எடுத்திருந்தனர். 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே தடுமாற்றம்தான். தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்த கான்வே இந்த போட்டியில் 8 ரன்களுடன் நடையை கட்டினார். தொடர்ந்து பின்னால் 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்த ருதுராஜ் ஜாம்பா பந்தில் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்ததாக ரஹானே 15 ரன்களுடனும், அம்பத்தி ராயுடுவும் அஷ்வின் வீசிய 11 வது ஓவரில் அவுட்டாகினர். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
விக்கெட்கள் விழுந்தாலும் உள்ளே வந்த துபே மற்றும் மொயின் அலி, சென்னை அணியை மீட்க வலுவாக களமிறங்கினர். அஷ்வின் வீசிய 14வது ஓவரில் துபே இரண்டு பிரமாண்ட சிக்ஸர்களை பறக்கவிட, ஜாம்பா வீசிய அடுத்த ஓவரிலும் முதல் பந்தும் சிக்ஸர் அடித்து மிரட்டினார். அதே ஓவரில் மொயின் அலி அவுட்டாக, ராஜஸ்தான் அணி பக்கம் காற்றடிக்க தொடங்கியது. தொடர்ந்து ஒற்றை ஆளாக கிடைக்கும் பந்துகளை வெளுக்க தொடங்கினார் ஷிவம் துபே. ஜடேஜாவும் தன் பங்கிற்கு 2 பவுண்டரி அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12 பந்துகளில் 46 ரன்கள் தேவையாக இருந்தது. 19 வது ஓவரில் இருவரும் இணைந்து 9 ரன்கள் மட்டுமே அடித்தனர். கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கும், ராஜஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கும் முன்னேறியது.