IPL 2025: கோப்பைக்கான சண்டை இல்ல.. கேப்டன்சிக்கான சண்டை! கோதாவில் இவங்கதான்!
IPL 2025: நடப்பு ஐபிஎல் தொடர் கோப்பைக்கான மோதலாக மட்டுமின்றி இந்திய அணியின் வருங்கால கேப்டன் யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாகவும் மாறியுள்ளது.

IPL 2025: ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக ஐபிஎல் தொடர் என்றாலே அது கோப்பைக்கான மோதலாகவே நடக்கும். ஆனால், இந்த முறை கோப்பையுடன் சேர்ந்து வேறு ஒரு யுத்தமாகவும் அது மாறியுள்ளது.
விறுவிறுக்கும் ஐபிஎல் தொடர்:
இந்திய அணியை வழிநடத்திய தோனி, கோலி மற்றும் வழிநடத்தும் கோலி ஆகியோரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்வு இறுதிகட்டத்தில் உள்ளது. இதில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மாவும் டி20-யில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே இந்திய அணிக்காக ஆடுவார்கள்.
கேப்டனுக்கான யுத்தம்:
இந்த நிலையில், இந்திய அணியை இனி வரும் காலங்களில் நிலையாக வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா போன்று 3 வடிவங்களிலும் ஆடும் இந்திய வீரர்கள் மிகவும் குறைந்த அளவில் மாறி வருகின்றனர. இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடர் கோப்பைக்கானதாக மட்டுமின்றி இந்திய அணியை அடுத்து வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்விக்கு விடை காணும் தொடராக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட். சுப்மன்கில் உள்ளனர். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இவர்கள் 3 பேரும் இருந்தாலும் இந்த தொடர் தொடங்கிய பிறகு இந்த போட்டியில் புதியதாக இணைந்துள்ளவர் அக்ஷர் படேல். தற்போது டி20 அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தினாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் ஏற்கனவே வழிநடத்திய அனுபவம் ஹர்திக் பாண்ட்யாவிற்கு உண்டு.
நிலையான, நீடித்த, வலுவான கேப்டன்சி:
இந்த நிலையில், இந்திய அணியை எதிர்காலத்தில் தோனி, கோலி, ரோகித் போன்று நிரந்தரமாக வழிநடத்தப் போவது யார்? என்ற கேள்வி மிகவும் ஆழமாக எழுந்துள்ளது. ஏனென்றால் ஒரு வலுவான அணித்தலைவன் என்பது அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.
தற்போது இந்திய அணிக்கு அதுபோன்று எந்த ஒரு வலுவான கேப்டனும் இல்லை என்றே கூற வேண்டும். வயது, அனுபவம், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த மோதல் நடந்து வருகிறது. இவர்கள் மட்டுமின்றி ருதுராஜ், ரஜத் படிதார், சஞ்சு சாம்சன் போன்ற கேப்டன்கள் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்க போராடி வருகின்றனர்.
இந்த தொடரைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன்கில், அக்ஷர் படேல் அருமையாக கேப்டன்சி செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட் பேட்டிங், கேப்டன்சியில் தடுமாறினாலும் தனது அணியை மோசமான நிலை இல்லாமல் வெற்றியுடன் வழி நடத்தி வருகிறார். தற்போது டெஸ்ட் அணியை ரோகித்திற்கு பிறகு பும்ரா வழிநடத்தினாலும், அவர் காயத்தால் அவதிப்பட்டால் யார் வழிநடத்துவது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வீரர்கள் தேர்வு செய்வது பொருத்தமற்றதாக இருக்கும் என்றாலும், இவர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் பொருந்தும் வீரர்களைத் தேர்வு செய்து அவர்களை பண்படுத்த வேண்டியதும் இந்திய அணிக்கு கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈகோவாக மாறுமா?
அடுத்த ஒருநாள் அணியின் கேப்டன் போட்டியில் சுப்மன்கில், பாண்ட்யாவுடன் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது மல்லுக்கு நிற்கிறார். இந்திய அணியில் தலைமைப் பண்பு நிறைந்த பல வீரர்கள் உருவாகி வருவது அணிக்கு ஆரோக்கியமான விஷயம் ஆகும். அதேசமயம், இதுவே இவர்கள் இந்திய அணிக்காக ஆடும்போது ஈகோ-வாக மாறாமல் ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
இந்திய அணியின் நீண்டகாலம் வழிநடத்தக் கூடிய கேப்டனைத் தேர்வு செய்யக்கூடிய ஆரோக்கியமான தொடராக இந்த ஐபிஎல் மாறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

