Ind vs Eng 2021: இன்று மூன்றாவது டெஸ்ட்... இந்தியாவிற்கு ராசியான லீட்ஸ் மைதானம் : வரலாறு சொல்வது என்ன?
இந்தியா-இங்கிலாந்து நாளை மோத உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி 54 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சாதனையை இந்தியா தக்க வைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது கிரிக்கெட் போட்டி இன்று அந்த நாட்டில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் உள்ள மைதானங்களில் லீட்ஸ் மைதானம் இந்தியாவிற்கு மிகவும் ராசியான மைதானம் ஆகும்.
இந்த மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 3 முறையும், இந்திய அணி 2 முறையும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. 1952ம் ஆண்டு முதல் இந்திய அணி முதல் முறையாக இந்த மைதானத்தில் ஆடியது.
அந்த போட்டியில், இந்திய அணி இங்கிலாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பின்னர், 1959ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்திடம் இந்திய அணி இதே மைதானத்தில் மோதியது. அந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 173 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. பின்னர், 1967ம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி இங்கிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 1979ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதன்முறையாக தோல்வியை தவிர்த்து அந்த போட்டியை டிரா செய்தது. பின்னர், 1986ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக லீட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த போட்டியில் இந்திய அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர், 2002ம் ஆண்டு இதே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை கங்குலி தலைமையிலான அணி பெற்றது.
இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் இதுவரை தாங்கள் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் இரு போட்டிகளில் மட்டுமே சதம் அடிக்கவில்லை, மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சதங்களை குவித்துள்ளனர். இந்த மைதானத்தில் முதல்முறையாக 1952ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலே இந்திய வீரர் விஜய் மஞ்ச்ரேக்கர் (133 ரன்கள்) சதம் அடித்து அசத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பட்டோடி (148 ரன்கள்), திலீப் வெங்கர்சார் (102) சச்சின் டெண்டுல்கர் (193) சவ்ரவ் கங்குலி (128) மற்றும் ராகுல் டிராவிட் ( 148) ஆகியோர் சதங்களை அடித்துள்ளனர். இங்கிலாந்து அணியிலும் நாசர் ஹூசைன், இயான் போத்தம், ஜெப்ரி பாய்காட், பாசில் டி ஆலிவேரா, காலின் கவ்ட்ரே ஆகியோர் சதமடித்துள்ளனர்.
இந்த மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்று 54 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த மைதானத்தில்தான் இந்திய கிரிக்கெட் ஜாம்பவன்களாகிய சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மூவரும் இணைந்து ஒரே இன்னிங்சில் சதமடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மேலும், இந்திய அணி இங்கிலாந்தில் தனது அதிகபட்ச ரன்னாக 628 ரன்களை இந்த மைதானத்தில் குவித்துள்ளது.