"பாபர் அசாம் தகுதியற்றவர்" இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆவேசம் - ஏன் அப்படி சொன்னார்?
பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றப்பட்டால் பாபர் அசாம் அந்த நாட்டு சர்வதேச டி20 போட்டிக்கான அணியில் ஆடத் தகுதியற்றவராக மாறிவிடுவார் என்று முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு அனைத்து அணிகளும் தயாராகியுள்ள நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன்கள் பலருக்கும் குரூப் சுற்றில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
லீக் சுற்றிலே வெளியேறிய பாகிஸ்தான்:
பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னணி அணிகள் லீக் சுற்றிலே வெளியேறிவிட்டது. இந்த தொடரிலே மிகப்பெரிய அதிர்ச்சி பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததே ஆகும். இந்திய அணியிடமும் பாகிஸ்தான் அணி தோற்றதால் அவர்களால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை,
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் பற்றி இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, சேவாக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
தகுதியற்றவர்:
“ பாபர் அசாம் சிக்ஸர் அடிப்பதில் நல்ல வீரர் கிடையாது. அவர் நன்றாக செட் ஆன பிறகு, ஸ்பின்னர்கள் வீசத் தொடங்கியபிறகு மட்டுமே சிக்ஸர் அடிக்கிறார். அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கால்களை நகர்த்தி ஆடி நான் பார்த்ததே இல்லை. அதுமட்டுமின்றி அவர் அவர் கவர் திசையிலும் சிக்ஸர் அடிப்பது இல்லை. மிகவும் பாதுகாப்பாக கிரிக்கெட் ஆடுகிறார். அதனால், அவர் தொடர்ந்து ரன்களை எடுத்தார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் பெரியதாக இல்லை.
ஆனால், ஒரு தலைவராக நீங்கள் உங்கள் ஆட்டம் அணிக்கு உதவிகரமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உங்களை பதவி இறக்கிக் கொண்டு பெரிய ஷாட்களை ஆடும் ஒருவரை இறக்கிவிட்டு 6 ஓவர்களில் 50 அல்லது 60 ரன்களை அடிப்பவர்களை இறக்க வேண்டும். நான் பேசுவது கடினமாக இருக்கலாம். ஆனால், கேப்டன் மாற்றப்பட்டால் பாபர் அசாம் டி20 அணியில் இருக்க தகுதியற்றவராக இருப்பார். இன்றைய டி20 கிரிக்கெட்டின் தேவைக்கு ஏற்ப அவரது ஆட்டம் இல்லை.”
இவ்வாறு சேவாக் பேசியுள்ளார்.
பாபர் அசாம் செயல்பாடு எப்படி?
பாபர் அசாம் இந்த டி20 உலகக்கோப்பையில் இதுவரை ஆடிய போட்டிகளில் வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 101.66 ஆகும். பாபர் அசாம் இதுவரை 123 டி20 போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 36 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 145 ரன்களை எடுத்துள்ளார். பாபர் அசாம் ஆடிய பெரும்பாலான டி20 போட்டிகள் அவரது சொந்த நாடான பாகிஸ்தானிலே ஆடியது ஆகும். அந்நிய மண்ணில் அதிகளவில் ஆடிய அனுபவம் இல்லாததும் பாபர் அசாம் டி20 உலகக்கோப்பையில் சறுக்கியதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் சேவாக் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் டெஸ்ட் போட்டியில் 23 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 32 அரைசதங்கள், ஒருநாள் போட்டியில் 15 சதங்கள், 1 இரட்டை சதம், 38 அரைசதங்கள், ஐ.பி.எல். போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 16 அரைசதம் விளாசிய பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: T20 World Cup, Super 8: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகள் - இந்தியாவுடன் மோதப்போகும் அணிகள் என்ன? எப்போது?
மேலும் படிக்க: BAN vs NEP, T20 World Cup: அட்ராசக்க..! டி-20 உலகக் கோப்பை - நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற வங்கதேசம்