BAN vs NEP, T20 World Cup: அட்ராசக்க..! டி-20 உலகக் கோப்பை - நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற வங்கதேசம்
BAN vs NEP, T20 World Cup: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் நேபாள அணியை, 21 ரன்கள் வித்தியசாத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது.
BAN vs NEP, T20 World Cup: ஐசிசி டி-20 உலகக் கோப்பை லீக் சுற்றில் நேபாளம் அணியை வீழ்த்தியதன் மூலம், வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம்:
முதலில் பேட்ட்ங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள அணி, வெறும் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, டி பிரிவில் தென்னாப்ரிக்கா அணியுடன் சேர்ந்து, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி டி-20 உலகக் கோப்பை:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் டி-பிரிவைச் சேர்ந்த வங்கதேச மற்றும் நேபாளம் அணிகள் இன்று மோதின.
பந்துவீச்சில் மிரட்டிய நேபாளம்:
மேற்கிந்திய தீவுகளில் உள்ள அர்னோஸ் வாலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணியில் டன்ஹித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமலும், லிட்டன் தாஸ் 10 ரன்களிலும், ஷண்டோ 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேபாள பந்துவீச்சாளர்கள் ரன்களை விட்டுக்கொடுக்காமல் மிகவும் சிக்கனமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ரன்களையும், மஹ்மதுல்லா மற்றும் ரிஷத் ஹொசைன் தலா 13 ரன்களையும் எடுத்தனர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். இதனால் 19.3 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது. நேபாளம் சார்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் படேல் மற்றும் சந்தீப் ஆகியோர் தலா 2 வ்க்கெட்டுகளை சாய்த்தனர்.
மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய நேபாளம்:
எளிய இலக்கை நோக்கி களமிறங்கினாலும், நேபாள அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆடிய குஷல் மல்லா 27 ரன்களையும், திபேந்திர சிங் 25 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19.2 ஓவர்களிலேயே வெறும் 85 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இன்றைய வெற்றியின் மூலம் வங்க தேச அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அவர்களது சார்பில் தன்ஜிம் ஹசன் 4 ஓவர்கள் வீசி, 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முன்னதாக தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் நேபாளம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.