IND-W vs PAK-W:இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதல்! டி20 உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை சுவைத்தது யார்?
India Women vs Pakistan Women:டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டிகளில் யார் அதிக முறை வெற்றியை சுவைத்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்

டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டிகளில் யார் அதிக முறை வெற்றியை சுவைத்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில் நேற்று (அக்டோபர் 5) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்தது மற்றும் நேற்றைய போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இச்சூழலில் தான் இந்திய அணி நாளை (அக்டோபர் 6) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இச்சூழலில் டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
2009 டி20 உலகக் கோப்பை:
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி. 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 17.4 ஓவர்கள் முடிவில் 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் சோப்ரா 52 பந்துகளில் 37 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
2010 டி20 உலகக் கோப்பை:
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி இரண்டாவது முறையாக எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் 16.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணி வீராங்கனை பூனம் ரவுத் 54 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
2012 டி20 உலகக் கோப்பை:
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2014 டி20 உலகக் கோப்பை:
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்தவகையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வீராங்கனை சோனியா டபீர் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2016 டி20 உலகக் கோப்பை:
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா தான் டி20 உலகக் கோப்பை தொடரை முதல் முறையாக நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்த போது மழை குறிக்கிட்டது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
2018 டி20 உலகக் கோப்பை:
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிதாலி ராஜ் தனது சிறந்த நாக் ஆட்டத்தை விளையாடினார். அவர் மொத்தம் 56 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 133 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2023 டி20 உலகக் கோப்பை:
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்களை எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

