IND Vs AFG T20I: வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி.. நாளை இந்தியா - ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டி
IND Vs AFG T20I: இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 14 மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச டி20 போட்டிக்கு திரும்பினர். இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காராணமாக இருந்தார்.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது பந்தில் தனது விக்கெட்டினை இழக்க, ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மட்டும் இல்லாமல் ப்ளேயிங் லெவனில் விராட் கோலி இடம் பிடிக்காதது இந்திய ரசிகர்களுக்கு ஏற்கனவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி நாளை அதாவது ஜனவரி 14ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்களும் தொடரை வெல்ல வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.
King Kohli on his way to Indore.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 13, 2024
- The GOAT returns tomorrow...!!! 🐐pic.twitter.com/CQFQvpp5i8
முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் விராட் கோலியும் இரண்டாவது போட்டியில் களமிறங்குவார் என இந்திய அணி ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர். விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்., அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான்: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், ரசீப் உர்ஹா , ஃபரீத் அஹ்மத், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப்