Ganguly Appreciates Dravid | ஜமி எப்போதும் அப்படித்தான்.. டிராவிட் செய்த மாஸ் சம்பவம்.. பாராட்டிய கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரை சிறப்பாக கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் முதல் முறையாக இந்த இரண்டு தொடர்களிலும் செயல்பட்டார். இதன்மூலம் தனது பதவிக்காலத்தை வெற்றியுடன் டிராவிட் தொடங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து டிராவிட்டின் முதல் பெரிய தொடராக தென்னாப்பிரிக்க தொடர் அமைந்துள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. ஆகவே இம்முறை எப்படியாவது அங்கு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற பொறுப்பு டிராவிட்டிற்கு உள்ளது. இதற்காக இந்திய அணி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது.
இந்நிலையில் டிராவிட்டின் செயல்பாடுகள் குறித்து அவர் கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது செய்தது தொடர்பாகவும் கங்குலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “என்னுடைய நண்பர் டிராவிட்டிற்கு எனது வாழ்த்துகள். பயிற்சியாளராக அவர் தன்னுடைய பணியை சிறப்பாக தொடங்கியுள்ளார். கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வீரர்களின் பயிற்சி முடிந்த பிறகு பந்துகள், கோன்கள், பயிற்சி உபகரணங்கள் ஆகியவற்றை டிராவிட் எடுத்து வந்தார். அதை நான் கேள்வி பட்டேன். அதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர் அந்த மாதிரியான மனிதர் தான். அவருடைய இயல்பு எப்போதும் மாறாது.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. விராட் கோலி-ரோகித் சர்மா இடையே நல்ல உறவு தொடர நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம். விராட் கோலியிடன் நானே தனிப்பட்ட முறையில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறினார். நீண்ட நாட்கள் கேப்டனாக இருந்தால் அது வருவது இயல்பு தான். ஆகவே தான் குறைந்த ஓவர்கள் போட்டிகளுக்கு ஒரே கேப்டன் என்ற முடிவை தேர்வுக்குழு எடுத்தப் போது விராட் கோலியை நீக்க வேண்டிய சூழல் வந்தது. எனினும் அவரே தொடர்ந்து இந்திய டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கான்பூர் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அந்த ஆடுகளத்தை தயார் செய்தவருக்கு பரிசு கொடுத்தார். அதாவது அவருடைய சொந்த பணத்திலிருந்து 35 ஆயிரம் ரூபாயை பரிசாக டிராவிட் வழங்கினார். இந்தச் சம்பவமும் அப்போது பெரிதாக கருதப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் தன்னுடைய விளையாட்டு காலத்திலும், அதற்கு பின்பும் டிராவிட் எப்போதும் ஜென்டில்மேனாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மின்சார கண்ணா.. சிங்கப்பாதை.. தலைவர் பிறந்தநாளில் தல தோனியை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தது சிஎஸ்கே !