Kolathur Govt Hospital: வடசென்னை மக்கள் குஷி - ஆல் இன் ஆல் சிகிச்சை, 6 அடுக்குகள் - கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை
Kolathur Govt Hospital: கொளத்தூரில் விரைவில் திறக்கப்பட உள்ள 6 அடுக்குகளை கொண்ட “பெரியார் அரசு மருத்துவமனை”-யில் உள்ள வசதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Kolathur Govt Hospital: கொளத்தூரில் விரைவில் திறக்கப்பட உள்ள “பெரியார் அரசு மருத்துவமனை” 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கொளத்தூர் “பெரியார் அரசு மருத்துவமனை”
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் முன்னோடியாக உள்ளது. அடிப்படை வசதிகள், உட்கடமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்திலும் பிரதான மாவட்டமாக இருப்பதாலே, மற்ற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி ஏராளமானோர் சென்னையில் முகாமிடுகின்றனர். அதேநேரம், பூர்வகுடிமக்கள் வசிக்கும் வடசென்னை பகுதி மற்ற பகுதிகளை போன்று இணையான முன்னேற்றம் கண்டுள்ளதா என கேட்டால் இல்லை என்பதே அதற்கு பதில். அதன் காரணமாகவே, தமிழக அரசு வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 அடுக்குகளை கொண்ட “பெரியார் அரசு மருத்துவமனை” தயாராகி வருகிறது.
6 அடுக்குகளை கொண்ட மருத்துவமனை:
பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து 8.3.2023 அன்று மூன்று தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்ட அடிக்கல்லும் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்து, 3.3.2021 அன்று பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த மருத்துவமனைக்கு, “பெரியார் அரசு மருத்துவமனை” என பெயர் சூட்டிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொளத்தூரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களால் “பெரியார் அரசு மருத்துவமனை” என்று பெயர் சூட்டிட ஆணையிடப்பட்டு,
— TN DIPR (@TNDIPRNEWS) February 23, 2025
(1/2) pic.twitter.com/f0ZGreXrCY
சிகிச்சை பிரிவுகள்:
பொதுப்பணித் துறையின் கூற்றுப்படி, இந்த மருத்துவமனை 19,778 சதுர மீட்டர் பரப்பளவில் 6 அடுக்குகளுடன் கட்டப்படுகிறது. மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள் இடம்பெறும். முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவை அரங்கங்கள் மற்றும் நவீன ரத்த வங்கி இடம்பெறும். இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகளும், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டும் அமைக்கப்பட்டுள்ளன. நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு இடம்பெறுகின்றன. ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, அறுவை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன், மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இதர வசதிகள்:
மருத்துவமனையில் நவீன சலவையகம், மத்திய கிருமி நீக்கல் துறை, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு, கேத் ஆய்வகம் ஆகியவையும் அமைந்துள்ளன. மேலும், இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், நான்கு மின்தூக்கிகள், 3 படிக்கட்டுகள், சாய்வு தளம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளும் அமையக்கூடிய வகையில் இக்கட்டடப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் உள்ளன.
வடசென்னை மக்கள் மகிழ்ச்சி:
தென்சென்னை பகுதி மக்களுக்குச் சிறப்பான மருத்துவ வசதிகளை கட்டணமின்றி அளிக்கும் வகையில் கிண்டியில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டது. அதேபோல, வடசென்னை மாவட்ட மக்களுக்கும் சிறப்பான மற்றும் கட்டணமில்லா மருத்துவ சேவைகளை அளிக்க்கும் நோக்கில் கொளத்தூரில் இந்த புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ அவசர சூழலில் வடசென்னை மக்கள் சென்னை செண்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையை நாட வேண்டும் என்ற சூழல் அகலும். குறைந்த நேரத்திலேயே கொளத்தூரில் உள்ள மருத்துவமனையை அணுகி, உரிய சிகிச்சை மூலம் உயிர்களை காப்பற்ற முடியும்.





















