(Source: ECI/ABP News/ABP Majha)
Srilanka: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83 உயர்வு.. டீசல் ரூ.111 உயர்வு! இலங்கையில் புது விலை!
இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாயும், டீசலுக்கு 111 ரூபாயும் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாயும், டீசலுக்கு 111 ரூபாயும் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருளுக்கு இலங்கையில் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தற்போதையை சூழ்நிலையில் இலங்கை மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலைமையில் இருப்பதாகவும், இலங்கை மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், இந்த நிலைமை மேலும் தீவிரமடையக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றது என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லாதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்திருந்தார். அதோடு, பெட்ரோல் தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதால் உயிரிழப்புகள் ஏற்படத்தொடங்கியிருப்பதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதில் பொதுமக்களிடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது.
இந்த நிலையில் பெட்ரோல் விலையை ஏற்றி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அதிகாலை 3 மணி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83 அதிகரித்து, ரூ420க்கு விற்கப்படும் என்றும் பவர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77 அதிகரித்து ரூ. 450க்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆட்டோ டீசல் லிட்டருக்கு ரூ. 111 அதிகரித்து ரூ.400க்கு விற்கப்படும் என்றும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.116 அதிகரித்து ரூ. 445க்கு விற்கப்படும் என்றும் இலங்கை எரிசக்தித்துறை அமைசர் காஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் விலைகளை திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு, இந்த புதிய விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலை திருத்தமானது பெட்ரோ, டீசல் இறக்குமதி, எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் மற்றும் வரி ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது. இந்த விலை உயர்வால் கிடைக்கும் இலாபங்கள் கணக்கிடப்படவில்லை மற்றும் சேர்க்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கேற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.