கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே மண் அரிப்பால் பழுதான சாலை தற்காலிக சீரமைப்பு
தற்காலிகமாக சீரமைக்கப்பட்டாலும் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தினால் நேதாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் உருவாகும் சூழலே உள்ளது
வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த மாதம் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1.80 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட ஆற்றில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதன் பிறகு நீர்வரத்து குறைய தொடங்கினாலும், ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து நிறுத்தம், மண் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.இதையடுத்து காவல் துறையினர், முன்னெச்சரிக்கையாக பொக்லைன் எந்திரம் மூலம் பேருந்து நிறுத்தத்தை இடித்து ஆற்றில் தள்ளினர். மேலும் ஆற்றின் கரையோரமுள்ள சாலை பலகீனமடைந்து காணப்பட்டதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்தனர்.
இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் பெய்த மழையால் மீண்டும் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதில் சாலையின் பெரும் பகுதி ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால், அவ்வழியாக முற்றிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செம்மண்டலம் வழியாக சென்ற வாகனங்கள், ஒரு வழிப்பாதையான மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை வழியாக மீண்டும் இயக்கப்பட்டன. நகரில் மிகவும் குறுகலான சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்று வந்ததால், நேதாஜி சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சுமார் 200 மீட்டர் தூரத்தை கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆற்றில் ஏற்பட்ட மணல் அரிப்பு காரணமாக பாதிக்கபட்ட சாலையினை விரைந்து சீர் செய்ய வேண்டும் என பலதரப்பட்ட கோரிக்கைகள் எழுந்தன இந்நிலையில் ஆற்றில் நீர் வரத்து குறைந்து காணப்படுவதால் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலை தற்காலிகமாக மண், மணல் மூட்டைகள் மற்றும் கட்டைகளை வைத்து சீர் செய்யபட்டு கார், மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் தற்பொழுது போக்குவரத்து அனுமதிக்க பட்டு உள்ளது. இருப்பினும் இன்னும் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தினால் நேதாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் உருவாகும் சூழலே காணப்படுகிறது ஆகையால் விரைவாக செயல்பட்டு முழு சாலையையும் சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.