![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Spurious Liquor Death: களத்தில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி. சூடுபிடிக்கும் விசாரணை..! விஷ சாராய விவகாரத்தில் அடுத்து என்ன ?
விஷசாராய வழக்கில் சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![TN Spurious Liquor Death: களத்தில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி. சூடுபிடிக்கும் விசாரணை..! விஷ சாராய விவகாரத்தில் அடுத்து என்ன ? Tamil Nadu Spurious Liquor Death CBCID Enquiry what the next plan police enquiry TN Spurious Liquor Death: களத்தில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி. சூடுபிடிக்கும் விசாரணை..! விஷ சாராய விவகாரத்தில் அடுத்து என்ன ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/1b92fc4b8347f1875d91c23a323cf6891685024612596191_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஷச்சாராயம் ( மெத்தனால் )
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில், மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50- க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் 20 பேர் சிகிச்சை முடிந்து தற்பொழுது வீடு திரும்பி உள்ளனர். இதே நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியிலும் விஷ சாராயம் அருந்திய விவகாரத்தில் 8 பேர், உயிரிழந்தனர். 10- க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அஞ்சலை என்ற பெண் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குண்டாஸ் சட்டத்தில் கைது
இதனிடையே, விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிபிசிஐடி காவல் துறை
அதேபோல், சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்ற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை மற்றும் சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் செங்கல்பட்டு சித்தாமூர் பகுதியில் விஷச்சாராயம் விற்பனை செய்த அமாவாசை , ஓதியூர் பகுதியை சேர்ந்த சந்துரு, வேலு, பனையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 5 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி ( CBCID ) காவல் துறைக்கு மாற்றப்பட்டது.
மேலும், இதன் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் டிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார். அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி கூடுதல் டிஎஸ்பி மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவைத் தொடர்ந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதியில் பதியப்பட்ட வழக்கினை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றினர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது .
ரசாயன நிறுவன உரிமையாளர்
இந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிபிசிஐடி காவல் துறையினர், கடந்த மே -19 ஆம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கினர். இதில், மரக்காணத்தைச் சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம் மற்றும் ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உள்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறைக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
களத்தில் இறங்கிய சிபிசிஐடி.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். முதல்கட்டமாக, விஷச்சாராயம் அருந்தியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வரும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவரிடம் செங்கல்பட்டு மாவட்ட விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதனையடுத்து, மதுராந்தகம் அருகே ,கரிக்கந்தாங்கள் கிராமத்தில் விஷச்சாராயம் விற்ற அமாவாசைக்கு சொந்தமான பண்ணைக்கு சென்று சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையில், அந்தப் பனையில் காவல் பணியில் ஈடுபட்ட இருந்த பணியாளரிடம் தொடர்ந்து , அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து கைது
இதில் டிஎஸ்பி வேல்முருகன் செல்வகுமார் ஆய்வாளர் அருள் பிரசாத் ஆகியோர் விசாரணை போது உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, பெருக்கரணையில் சின்னத்தம்பி வசந்தா வீடுகளில் சென்று அவர்கள் இறந்த இடங்கள் மற்றும் அவர்களின் வீடுகளை ஆய்வு நடத்தினர் . அங்குள்ள விஷச்சாராயம் எடுத்து வந்து அருந்திய பாட்டில்களையும் இறந்து கிடந்த இடங்களையும், மேலும் அவர்களின் உறவினர்களிடமும் தொடர்ந்து, 1 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் பேரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வெண்ணியப்பன் அவரது மனைவி சந்திரா மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் கள்ளச்சாராயம் அருந்திய பாட்டில்களையும் பறிமுதல் செய்து முதற்கட்ட விசாரணை செய்தனர். இன்னும் பலரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் ஆதாரங்களை திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)