நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - திருச்சியில் 2 நகராட்சி, 8 பேரூராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - மாநகரில் 33 வார்டுகளில் பெண்கள் போட்டி
’’திருச்சி மாவட்டத்தில் 2 நகராட்சி மற்றும் 8 பேருராட்சிகளில் தலைவர்கள் பதவிகளும் மாநகராட்சியில் 33 வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு’’
திருச்சி மாவட்டத்தில் 2 நகராட்சி தலைவர்கள், 8 பேரூராட்சி தலைவர்கள், பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ளார். இதன்படி 50 சதவீத பதவிகள் பெண்கள், பெண்களுக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்புகளுக்கும் உரிய விகிதாச்சார அடிப்படையில் தலைவர்கள் பதவி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி இட ஒதுக்கீடு விவரங்கள்
நகராட்சி பொறுத்தவரை திருச்சி மாவட்டத்தில் பேரூராட்சிகள் ஆக இருந்த லால்குடி, முசிறி பேரூராட்சிகள், நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இப்போது மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. மேலும் துறையூர் நகராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடர் வகுப்பை பெண்களுக்கும், முசிறி நகராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மணப்பாறை, லால்குடி, துவாக்குடி நகராட்சி தலைவர்கள் பதவி பொது பிரிவினருக்கானதாகும். இதனை தொடர்ந்து பேரூராட்சி பொறுத்தவரை திருச்சி மாவட்டத்தில் 16 பேரூராட்சிகள் இருந்தன.
இதில் 2 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதம் 14 பேரூராட்சிகள் உள்ளன, இதில் காட்டுப்புத்தூர், தொட்டியம் பேரூராட்சி தலைவர் பதவிகள் ஆதிதிராவிடர் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புள்ளம்பாடி, பாலகிருஷ்ணம் பட்டி, சிறுகமணி, பூவாளூர், உப்பிலியாபுரம், தாத்தையங்கார் பேட்டை ஆகிய 6 பேரூராட்சிகளின் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி 14 பேரூராட்சிகளில் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மண்ணச்சநல்லூர், கல்லக்குடி, கூத்தப்பார், மேட்டுப்பாளையம். பொன்னம்பட்டி, எஸ். கண்ணனூர், ஆகிய பேரூராட்சிகளின் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கானதாகும்.
இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்கள் மூலமாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக
திருச்சி மாநகராட்சிக்கான இட ஒதுக்கீட்டு பட்டியல்
திருச்சி மாநகராட்சி வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதே இட ஒதுக்கீடு பட்டியல் தொடர்கிறது அதன்படி மொத்தமுள்ள 65 வார்டுகளில் 33 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது இதற்காக மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலரான இட ஒதுக்கீடு விவரங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி ஆண், பெண் இருபாலாருக்குமான பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான விவரம் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் கேட்டபோது, 2019ஆம் ஆண்டு வார்டு வரையறை செய்து இட ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் வரும் தேர்தல் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.. அதன்படி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் மீதமுள்ள வெற்றி மக்கள் தொகை அடிப்படையில் சுழற்சி முறையிலான இட ஒதுக்கீடும் கொண்டு வார்டுகள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளது என்றார் இதன்படி திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 29 வார்டுகளும், எஸ்சி பிரிவு பெண்களுக்கு 4 வார்டுகளும், எஸ்சி பொது பிரிவினருக்கு 3 வார்டுகளும், பொதுபிரிவினர் ஆண், பெண்களுக்கு 29 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:- பெண்கள் பொதுப்பிரிவினர்- 1, 3, 4, 7, 9, 11, 13, 18, 21, 22, 24, 26, 30, 31, 32, 33, 37, 44, 45, 49, 50, 51, 52, 53, 56, 58, 59, 63, 64 வார்டுகள் ஒதுக்கீடு
பொது பிரிவு - 2, 5, 10, 12, 14, 16, 19, 20, 23, 25, 27, 28, 29, 34, 35, 36, 38, 39, 40, 41, 43, 46, 47, 48, 54, 55, 57, 60, 61 வார்டுகள் ஒதுக்கீடு
எஸ்.சி பெண்கள் - 6, 8, 15 மற்றும் 62 வார்டுகளும், எஸ்.சி (பொது) - 17, 42 மற்றும் 65 வார்டுகள் என ஒதுக்கீடு
அரசியல் கட்சியினர் ஏற்கனவே தங்களது நிர்வாகிகளிடம் விருப்பமான பெற்று நேர்காணல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.