திமுக இளைஞர் அணி இருசக்கர வாகன பேரணி - திருச்சியில் அமைச்சர் ஓட்டி உற்சாகம்
மாநில உரிமை மீட்பின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக இருசக்கர வாகன பிரச்சார பேரணியை திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி வருகிறார். அந்த வகையில், மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி மூலம் சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே திமுக இருசக்கர வாகன பேரணியை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். திமுக ரைடர்ஸ் பிரச்சாரக் குழுவினர் மேற்கொள்ளும் இந்த பேரணி, தமிழகம் முழுவதும் 8647 கிலோ மீட்டர் பயணிக்கவுள்ளது. மொத்தம் 188 இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் திமுக ரைடர்ஸ் பிரசாரக் குழு, 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயணிக்கவுள்ளனர். இந்த மாவட்டங்களானது வள்ளுவர் மண்டலம், பெரியார் மண்டலம், அண்ணா மண்டலம், கலைஞர் மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணிக்கிடையே, 504 இடங்களில் பிரச்சார முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 38 இடங்களில் தெரு முனைப் பிரசாரக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த இருசக்கர வாகன பேரணி திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதி வருகை புரிந்ததை யொட்டி அமைச்சர் மகேஷ் இளைஞர்களை வரவேற்று திருவெறும்பூர் தொகுதிக்கான பிரசாரத்தை திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பால்பண்ணை முதல் காட்டூர் தந்தை பெரியார் சிலை வரை அமைச்சர் இருசக்கர வாகனத்தை அவர் ஓட்ட பின் தொடர்ந்த வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பகுதி கழக செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.