மகளிர் கல்லூரியில் வகுப்பறை முதல் வளாகம் வரை சிதறி கிடந்த இரத்தம்! நீடிக்கும் மர்மம்! உண்மை வெளிவருமா?
”நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி வகுப்பறை முதல் வளாகம் வரை படிந்து கிடக்கும் இரத்தக்கரைகள்..! தற்போது வரை வெளியாகத தகவலால் நீடிக்கும் மர்மம்”
நெல்லை பழைய பேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 15க்கும் மேற்பட்ட பாட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 4,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் கடைசியாக உள்ள கட்டிடத்தில் இளங்கலை வணிகவியல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் ஆண்டு வகுப்பறையில் ரத்த துளிகள், இரத்த கரைகள் அதிகமாக இருந்துள்ளது. இதனை கல்லூரி பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி பார்த்து கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காலை கல்லூரிக்கு வந்த மாணவிகளும், முதல்வரிடம் இதே புகாரை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கல்லூரி வகுப்பறை, கல்லூரி வளாகம், மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இரத்த மாதிரிகள், மற்றும் கைரேகை, கால் தடங்கள் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்துக்கொண்டனர். கல்லூரி வளாகம் முதல் வகுப்பறை முழுவதும் இருந்த ரத்தக் கரைகளின் மாதிரிகள் சேமிக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் தொடர்பாக ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக எந்த ஒரு சிறு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை..
ஏற்கனவே கல்லூரி வளாகத்தில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ரத்தக்கரைகள் மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது கல்லூரி முழுவதும் இரத்தக்கரைகள் படிந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் கல்லூரி வகுப்பறையில் ஏதோ நடந்துள்ளது என்பது வீடியோ காட்சிகள் மூலம் பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக வகுப்பறையில் பெஞ்சிற்கு கீழே இரத்த கரைகள் அதிக அளவில் உள்ளது. அதனை பேப்பரால் துடைத்து அங்குள்ள குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்குள்ள ஸ்விட்ச் போடுகளிலும் இரத்த கரைகள் படிந்துள்ளது. அதன் பின் அங்கிருந்து வடிந்த நிலையில் இரத்தத்துளிகள் கல்லூரி வளாகம் வரை நீண்ட தூரத்திற்கு உள்ளது. அதன்பின் என்ன ஆனது என தெரியவில்லை. இதனை பார்க்கும் பொழுது விலங்களுடைய இரத்தம் இல்லை என்பது தெரிய வருகிறது. மனிதர்களுடையதாக இருக்கக்கூடும் என்றும், அப்படியென்றால் அங்கு நடந்தது என்ன என்பது குறித்தும் உண்மையான தகவல் வெளிவரவில்லை. இரத்த மாதிரிகளின் முடிவுகள் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.