Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
TVK Maanadu Madurai: மதுரையில், தவெக-வின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் கேட்ட கேள்விகள் என்னென்ன.? பார்க்கலாம்.

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், பிரதமர் மோடி மற்றும் பாஜக-வை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பிதமர் மோடிக்கு அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவற்றை இப்போது பார்க்கலாம்.
“இஸ்லாமிய தோழர்களுக்கு எதிராக சதி செய்யவா ஆட்சிக்கு வந்தீர்கள்.?“
மாநாட்டில் பேசியபோது, “மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களே, 3-வது முறையாக மத்தியில் ஆட்சியை நீங்கள் தானே கைவசம் வைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கு நன்மை செய்யவா இல்லை இஸ்லாமிய நண்பர்கள், தோழர்களுக்கு எதிராக சதி செய்யவா என கேள்வி எழுப்பினார் விஜய்.
பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்விகள்
மேலும், மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் உள்ளது, அதனால், அவர்கள் சார்பாக, அவர்களில் ஒருவனாக, அவர்களின் உண்மையான பிரதிநிதியாக உங்களிடம் சில கேள்விகள் கேட்கணும் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் அவர்களே எனக் கூறி, பல கேள்விகளை எழுப்பியதோடு, சில விஷயங்களையும் வலியுறுத்தினார் விஜய்.
- “நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேருக்கும் மேல் இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். அதற்காக பெரிதாக ஏதும் செய்யச் சொல்லவில்லை, சிறியதாகத்தான் கேட்கிறோம், கட்சத்தீவை மீட்டுக் கொடுத்துவிடுங்கள்“.
- “உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நீங்கள் நடத்தும் ‘நீட்‘ தேர்வால் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை சொல்ல மனம் வலிக்கிறது, ‘நீட்‘ தேர்வு தேவையில்லை என அறிவித்துவிடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“
- “ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி, அடிபணிய வைத்து, 2029 வரை சொகுசுப் பயணம் போகலாம் என்று திட்டம் தீட்டி உள்ளீர்கள், அதானே ஜி.?“
- “நீங்கள் என்னதான் நேரடி, மறைமுக கூட்டணிகளை போட்டாலும், தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்.?“
- கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து, எங்கள் நாகரீகத்தையும், வரலாற்றையும் அழிக்க உள்ளடி வேலை செய்யலாம் என நினைக்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டை தொட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா.? இதையெல்லாம் மறைத்து எங்கள் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்காதீர்கள், உங்கள் எண்ணம் ஒரு நாளும் ஈடேராது“.
இப்படி, பிரதமர் மோடியை வெளுத்து வாங்கி, அங்கு கூடியிருந்த தொண்டர்களை ஆர்ப்பரிக்க வைத்தார் விஜய்.





















