TVK about PTR: தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
தவெக-வின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ஊழலை பற்றி பேசியதாலேயே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டதாக கூறினார்.

மதுரை பாரபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பிரமாண்டமாக, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற போது, கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்தும், அமைச்சர் மூர்த்தி குறித்தும் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்“
இந்த மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும், மதுரையை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி, தவெகவின் மதுரை மாநாட்டிற்கு பல தடைகளை உருவாக்கியதாக குற்றம்சாட்டினார்.
“ஊழலை வெளிப்படுத்தியதாலேயே பிடிஆர் ஓரங்கட்டப்பட்டார்“
இதே மதுரை மண்ணைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சரின் மருமகனும், மகனும் மிகப் பெரிய ஊழல் செய்துவிட்டதாக கூறினார்.
அவர் அப்படி சொன்ன உண்மைக்காக அமைச்சரவையிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் என ஆதவ் அர்ஜுனா கூறினார். மேலும், திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்வதாக பட்டியலிட்டு பேசினார்.
அண்ணாவின் குறிக்கோள்களில் இருந்து திமுக விலகிவிட்டதாகவும், அண்ணாவின் கொள்கைகளை எந்த கட்சியும் தற்போது பின்பற்ற வில்லை என்றும், அதை செய்யத் தான் தவெக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“பின்புற வாசல் வழியாக பாஜக-வை உள்ளே நுழையவிட்ட அதிமுக“
அதேபோல், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து இன்றைய அதிமுக விலகிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் அதிகாரத்தை அடைவதற்காக, இன்றைய அதிமுக தலைமை, பாஜக-வை பின்புற வாசல் வழியாக வரவழைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
ஆனால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி, அதை அரசியல் வெற்றியாக மாற்றி, 2026-ல் மிகப் பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, ஆட்சியில் அமர்ந்து, அவர்களது கொள்கைகளை நிறைவேற்றுவோம் என ஆதவ் பேசினார்.
அறிஞர் அண்ணா கூறியதுபோல், ஏழைகளுக்கான அரசாக, ஒரு நேர்மையான அரசாக உருவாக்க, விஜய்யை, தம்பி வா, தலைமை ஏற்க வா என அறிஞர் அண்ணாவைப் போல் அழைப்பதாகக் கூறி அவ உரையை நிறைவு செய்தார்.





















