”நீ எத்தன வருஷம் நல்லா வாழ்ந்திருவ” நெல்லை அருகே இளைஞர்களின் மனக்குமுறல் போஸ்டரால் பரபரப்பு..!
”உன் பிள்ளைக்கு இந்த மாதிரி வந்தா? கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறாயே?புறம் பேசி தடுக்க நினைக்கிறியே? ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறியே நல்லா இருப்பியா நீ?”
இன்றும் 90's பலருக்கும் திருமணமாகாத நிலையில் 2k's திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. 90's திருமணங்கள் என்பது கனவு போல என்று பலரும் எண்ணி வருகின்றனர். அதேபோல சமூக வலைதளங்களில் 90's பரிதாபங்கள் என்று பல்வேறு மீம்ஸ்களை தெறிக்கவிட்டும் வருகின்றனர், இன்றைய இளைஞர்கள். 90's திருமணங்கள், 2k's திருமணங்கள் என்று இரண்டையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை அருகே பொன்னாக்குடி என்ற ஊரில் 50க்கும் மேற்பட்ட 90's கிட்ஸ் இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் இவர்களுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் யாருக்கு திருமணம் என்றாலும் அதனை கெடுத்து விடுவதையே சிலர் வேலையாக கொண்டிருப்பதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டி ஊர் முழுவதும் நூதன போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
அதில், வன்மையாக கண்டிக்கிறோம் !
இந்த ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே!! நீ எத்தனை வருஷம் நல்லா வாழ்ந்திடுவ?
உன் பிள்ளைக்கு இந்த மாதிரி வந்தா? கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறியே?
புறம் பேசி தடுக்க நினைக்கிறியே? ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறியே நல்லா இருப்பியா நீ? என்று அந்த போஸ்டரில் ஒட்டியுள்ளனர். மேலும் குறிப்பு என்று சில நபர்களின் அடையாளம் தெரியும், அடுத்த போஸ்டரை அவர்களின் புகைப்படம் வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரை கடந்து செல்வோருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் திருமணமாகாத ஏக்கத்தில் இருக்கும் பல இளைஞர்களின் வேதனை பதிவாகவே பார்க்கப்படுகிறது..
இது குறித்து அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் தெரிவிக்கும்பொழுது, பொன்னாக்குடி ஊரைச் சேர்ந்த வயதான ஒரு சிலர் ஊருக்குள் திருமணம் ஏதேனும் நிச்சயிக்கப்பட்டால் உடனடியாக அந்த வீட்டு நபர் குறித்து தவறாக தகவல் அனுப்பி திருமணத்தை நிறுத்துவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது.
அதோடு ஊருக்குள் யாருக்காவது திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே மணமக்களின் வீட்டிற்கு மொட்டை கடுதாசி அனுப்பி மணமகனை பற்றி தவறாக சித்தரித்து அதனை தடுக்க பார்க்கின்றனர். இளைஞர்களின் கல்யாண ஏக்கத்தை சிதைக்கும் இந்த ஊரில் உள்ள ஒரு சிலரின் செயலால் அப்பகுதி இளைஞர்கள் கடும் கோபத்துடன் இருப்பதை போஸ்டராக ஒட்டி ஆறுதலடைந்ததாக கூறுகின்றனர்.
தொடர்ந்து இது போன்று இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடாமல் அவரவர் வேலைகளை பார்த்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு என்றும் தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் இந்த போஸ்டர் அப்பகுதி முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.