TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்று கருதப்படும் விசிக வேட்பாளரை களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகும்.
விஜய்க்கு போட்டியாக விசிக:
திரைப்பட நடிகராக தனக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய், ரசிகர்களை நம்பி இந்த தேர்தலில் களமிறங்குகிறார். முதன்முறையாக அரசியல் களத்தில் புகுந்துள்ள விஜய் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் அவர் சென்னையில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் விஜய்க்கு போட்டியாக விசிக-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த தேர்தலில் விசிக வசம் சென்ற நாகை, திருப்போரூர் தொகுதிகள் வேறு கட்சிகளுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பூர்:
இதனால், சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி இந்த முறை விசிக-விற்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பூர் மட்டுமின்றி ராயபுரம், ஆர்கே.நகர் ஆகிய தொகுதிகளும் விசிக-வின் விருப்ப பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவு உள்ளது. விசிக-விற்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு, அதே தொகுதி விசிக-விற்கும் ஒதுக்கப்பட்டால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆளூர் ஷாநவாசை களமிறக்கவே திமுக-வும், திருமாவளவனும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மை வாக்குகள்:
ஆளூர் ஷாநவாஸ் தற்போது நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் தனது பதவிக்காலத்தில் தொகுதியில் கிடப்பில் இருந்த பல்வேறு திட்டங்களையும், கோரிக்கைகளையும் செயல்படுத்தியதாகவும் அவருக்கு தொகுதியில் வரவேற்பு உள்ளது.
இதனால், அவரை விஜய்க்கு எதிராக நிறுத்தினால் சிறுபான்மையின வாக்குகளையும், திமுக ஆதரவுடன் மற்றவர்களின் வாக்குகளையும் பெற வியூகம் வகுத்து வருகின்றனர். விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்குவது உறுதியானால் அதே தொகுதியில் விசிக-வை களமிறக்கலாமா? அல்லது திமுக-வே நேரடியாக களத்தில் இறங்கலாமா? என்றும் திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
போட்டி தரும் தவெக:
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக-விற்கு அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் புதிய வரவான தவெக-வும் போட்டியாக அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அவர்களின் வாக்கு சதவீதம் 15 சதவீதத்திற்கும் அதிகளவில் இருப்பதால் இந்த தேர்தலில் தவெக, ஒவ்வொரு கட்சிக்கும் கடும் சவால் அளிப்பார்கள் என்றே கருதப்படுகிறது. விஜய் செல்லுமிடம் எல்லாம் திமுக-வை கடுமையாக எதிர்ப்பதால் அவரை வீழ்த்த திமுக மிகத் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது.























