இடஒதுக்கீடு நிறுத்தி வைப்பு; சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது - எஸ்டிபிஐ
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு நிறுத்தி வைப்பு - எஸ்டிபிஐ கண்டனம்
இனிவரும் காலத்தில் முதுநிலை மருத்துவ படிப்பில் 50% ஒதுக்கீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், குறிப்பிட்ட 15 மருத்துவ மேற்படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் தமிழக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில மருத்துவத்துறைகளில் பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி, 2024-2025ம் ஆண்டு முதல் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், வரும் ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இனிவரும் காலத்தில் 50% ஒதுக்கீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.
பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்தத் துறைகளில் மென்மேலும் பணியிடங்களை உருவாக்க வேண்டிய கட்டாய தேவை உள்ள நிலையில், மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டுவதைப் போல அந்தப் பணியிடங்களை உருவாக்காமலேயே செயற்கையாக மிகையான தோற்றம் அரசால் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு தர மறுப்பது என்பது, எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்படும் அரசின் பிற்போக்கான நடவடிக்கையாகும் என்கிற மருத்துவர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு மிகச்சரியானதாகும். முதுநிலை மருத்துவப் படிப்பில் சிறப்பு துறைகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடை நிறுத்தி வைக்கும் நடவடிக்கை மற்றும் அதனை குறைக்கும் நடவடிக்கையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இணைந்து பணி செய்யும் ஆர்வத்தை கேள்விக்குட்படுத்தும். மேலும், இது மேம்பட்டுள்ள மாநில சுகாதாரத்துறையில் பின்னடைவை ஏற்படுத்தும். மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 50% ஒதுக்கீடு தான் தமிழகம் சுகாதாரத் துறையில் முன்னேறியிருப்பதற்கு காரணமாகும். மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவ வல்லுநர்கள் அதிக அளவில் இருப்பதற்கும் காரணமாகும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஆற்றிவரும் சேவைக்கு அளிக்கப்படும் ஊக்கமும், உத்திரவாதம் தான் 50% ஒதுக்கீடு.
ஆகவே, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதற்காக விதிகளின்படி தேவைப்படும் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.