ராமநாதபுரம் : திடீர் தொடர் கோடை மழை! அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கம்! பயிர்களான நெல்மணிகள்...!
ஒரு போக சாகுபடி செய்வதற்கே விவசாயிகள் படாதபாடு படுகின்றனர். கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனையவிட்டு வீணாக்குவதைப் பார்க்கும்போது வேதனையாக'' உள்ளது என வேதனை தெரிவித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் மூலமாக பெறப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்பற்ற முறையில் வெட்ட வெளியில் அடிக்கி வைத்திருந்ததால் சமீபத்தில் பெய்த மழையில் நனைந்து முளைப்பு விட தொடங்கியுள்ளது ஆனால், இந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் தார்பாய் போட்டு மூடி வைக்குமாறும் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்காததால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து முளைத்து விட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்த இடம் முழுவதும் மழை நீரானது குளம் போல் தேங்கி உள்ளதால் விவசாயிகள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வைத்திருந்த நிலையில் நெற்கள் அனைத்தும் வீணாகிய சம்பவம் விவசாயிகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்களுக்கு கடந்த 2 மாதத்திற்கும் மேலாக அவர்களுக்கு பணம் வழங்கப்படாமல் அனைத்தும் வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகி விட்டது.எனவே, முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தண்ணீரில் மிதப்பதை அப்புறப்படுத்தி, நெற்களை பாதுகாத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக,விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெற்கள் வீணானது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன், அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிச் செல்லாமலும் தேக்கி வைப்பதால், மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய்கூட அதிகாரிகள் கொடுப்பதில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நெல் சேமிப்பு கிடங்கு தேவை எனத் தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். கடந்த வேளாண் பட்ஜெட்டில்கூட சேமிப்புக் கிடங்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், தமிழக அரசு எங்களை ஏமாற்றி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி. இங்கு ஒரு போக சாகுபடி செய்வதற்கே விவசாயிகள் படாதபாடு படுகின்றனர். அப்படி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனையவிட்டு வீணாக்குவதைப் பார்க்கும்போது வேதனையாக'' உள்ளது என வேதனை தெரிவித்தார்