Mallar Kambam: மல்லர் கம்பம் கலை மட்டுமல்ல; போதை பாதைக்கு கொண்டு செல்லாமல் இருக்கும் விளையாட்டு..!
கொத்தனார் வேலைக்கு சென்று, அதில் வரும் வருமானம் மூலம் இதற்கு தேவையான பொருட்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகிறேன்.
உரலில் குழவி சுற்றுவது போல சுற்றும் நபர் நிலையாக இருக்க கம்பு செயல்பட்டால் அது சிலம்பம். குழவி நிலைத்து நிற்க உரல் சுற்றுவதுபோல, கம்பு நிலைத்து நிற்க ஆடும் நபர் செயல்பட்டால் அது மல்லர் கம்பம்.
தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், இந்த விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர். தங்களின் பராக்கிரமச் செயலுக்கு வலுவேற்ற இந்த மல்லர் கம்பம் அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது. இந்த விளையாட்டு, சிறந்த உடற்பயிற்சியாகும். சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தனர். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என பெருமையோடு அழைக்கப்பட்டான் என்ற செவி வழிச் செய்தியும் உண்டு. சம்பம், களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் ஒரு தன்னிகரற்ற விளையாட்டாகும்.
மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடற்பயிற்சி என்பதால் நம் முன்னோரால் போற்றி வளர்க்கப்பட்டது மல்லர் கம்பம். மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரிதாகி வரும் அபூர்வ கலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அப்படி அழிந்து வரும் கலைகளில் ஒன்று தான் இந்த மல்லர் கம்பம் என்ற கலை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பண்ணைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கிப்சன். இவர் விளையாட்டுத்துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் சேலத்தில் படித்துக் கொண்டிருந்தபோது மல்லர் கம்பம் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்ட காரணத்தினால் இதில் சேர்ந்து விளையாடி வெற்றி பெற்றுள்ளார். படிப்பை முடித்த அவருக்கு இந்த மல்லர் கம்பம் கலை குறித்து தமிழகத்தில் அதிக அளவில் விழிப்புணர்வு இல்லாததை கண்டு இதனை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தார். முக்கியமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதியில் இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாததை கண்டதும் மல்லர் விளையாட்டை பிரபலப்படுத்த முயன்றதன் விளைவு இன்று 50 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
இதற்காக முதல் கட்டமாக அவரது சொந்த ஊரான பண்ணைவிளையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை அந்த பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவசமாக இந்த மல்லர் கம்பம் கலையை கற்றுக்கொடுத்து வருகிறார் கிப்சன். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தினால் மல்லர் கம்பம் விளையாட பயன்படும் கம்பு மற்றும் மெத்தைகள் வாங்க பணம் இல்லாததால் கொத்தனார் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானம் மூலம் பொருட்கள் வாங்கி இந்த மாணவ மாணவிகளுக்கு இந்த கலையை கற்றுக்கொடுத்து வருகிறார் இந்த இளைஞர்.
இதுகுறித்து கிப்சன் கூறும்போது, நான் பிஎஸ்சி மற்றும் பிபிஎட் முடித்துள்ளேன். நான் சேலத்தில் படிக்கும்போது தான் இந்த கலையை கற்றுக்கொண்டேன். இந்த விளையாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கிடையாது. நான் கல்லூரி பயின்ற சமயத்தில் விளையாட செல்லும் மற்ற மாவட்டங்களில் இருந்து இந்த விளையாட்டு விளையாட ஆட்கள் வருவார்கள். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒருவர் கூட வரமாட்டார்கள். அப்போது தான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்த விளையாட்டை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். கல்லூரி படித்துக் கொண்டிருந்த போதே வீட்டில் வைத்து மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் இந்த விளையாட்டை நாம் அனைத்து பகுதியிலும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அப்படித்தான் முதலில் எங்கள் கிராமத்தில் இதை தொடங்கினேன். அப்போது எனக்கு பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொத்தனார் வேலைக்கு சென்று, அதில் வரும் வருமானம் மூலம் இதற்கு தேவையான பொருட்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகிறேன். இப்போது நான் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்து வருகிறேன். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள அனைவருக்கும் பயிற்சி அளித்து வருவதாக கூறும் இவர், இதில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்கிறார். மேலும் இந்த கலையால் மாணவ மாணவிகளுக்கு பெரிய அளவில் நன்மைகள் உள்ளது. இந்த விளையாட்டை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் குடிப்பழகத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ செல்ல மாட்டார்கள். தலைகீழாக தொங்கி விளையாடும் போது உடலில் ரத்த ஓட்டம் என்பது சீராக இருக்கும். மேலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கும். இந்த விளையாட்டை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பது தான் நோக்கம் என்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்