”தூக்க மாத்திரை கொடுத்தும் சாகலடா, வா சேர்ந்து ஷாக் கொடுக்கலாம்” கணவனை கொன்ற மனைவி, ஏன் தெரியுமா?
Delhi Husband Murder: டெல்லியில் காதலனுடன் சேர்ந்து மனைவியே தூக்க மாத்திரை கொடுத்தும், ஷாக் அடிக்கச் செய்தும் கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Husband Murder: டெல்லியில் காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்றது, இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி:
டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த 36 வயதான நபர், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கருதப்பட்டது. ஆனால், அவரின் மனைவி மற்றும் உறவினர் இடையேயான இன்ஸ்டாகிரம் குறுஞ்செய்திகள் மூலமாக, நடந்தது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவு காரணமாக கணவனையே திட்டமிட்டு கொலை செய்வது என்பது அண்மை காலமாக வடமாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி மரணம்?
மேற்கு டெல்லி ஜானகிபுரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த 13ம் தேதி கொண்டு செல்லப்பட்ட, கரண் தேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்ததாக அவரது மனைவி சுஸ்மிதா தெரிவித்துள்ளார். தற்செயலாகவே மரணம் நிகழ்ந்ததாக கருதி குடும்பத்தினர் உடற்கூறாய்வு செய்யா வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இளம் வயது மற்றும் உயிரிழந்த சூழலை கருத்தில் கொண்டு, பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கான கரணின் உடலில் , ஹரிநகரில் உள்ள தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்ஸ்டாகிராமால் வெடித்த உண்மை:
சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒரு உரையாடல் ஒட்டுமொத்த வழக்கு விசாரணையையும் புரட்டிப் போட்டுள்ளது. உயிரிழந்த கரணின் தம்பி குணால், தனது அண்ணனின் மனைவி சுஸ்மிதாவிற்கும், அவரது அப்பா வழி உறவினரான ராகுல் என்பவருக்கும் இடையேயான உரையாடலை அம்பலப்படுத்தியுள்ளார். இதன் மூலம் கரண் திட்டமிட்டு கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.
ஜுலை.12ம் தேதி இரவு நடந்தது என்ன?
குறுந்தகவல்கள் அடிப்படையில், ஜுலை 12ம் தேதி இரவு கரணின் உணவில் அவரது மனைவி 15 தூக்க மாத்திரைகளை சேர்த்துள்ளார். ஆனால், அதனால் உடனடி விளைவுகள் ஏற்படாததால் சுஸ்மிதா பதற்றமடைந்துள்ளார். இதையடுத்து ராகுலுக்கு அனுப்பிய குறுந்தகவலில், “மருந்து சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் ஆகும் என ஒரு முறை ஆராய்ந்து பார். சாப்பிட்டு 3 மணி நேரம் ஆகியும் வாந்தி, மயக்கம் என எதுவுமில்லை. தற்போது வரை இறக்கவும் இல்லை. இப்போது நாம் என்ன செய்வது, ஏதேனும் ஆலோசனை சொல்” என தெரிவித்துள்ளார். அதற்கு, “உன்னால் எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்துவிடு” என ராகுல் ஆலோசனை வழங்கியுள்ளார்.
காதலனுடன் சேர்ந்து திட்டம்
தொடர்ந்து,
”சுஸ்மிதா: மின்சார ஷாக் கொடுக்க அவரை எப்படி கட்டிப்போடுவது?
ராகுல்: டேப்பை பயன்படுத்து
சுஸ்மிதா: அவர் மிகவும் மெதுவாக மூச்சு விடுகிறார்
ராகுல்: உன்னிடம் உள்ள அனைத்து மருந்தையும் கொடுத்து விடு
சுஸ்மிதா: அவரது வாயை என்னால் திறக்க முடியவில்லை. வாயில் என்னால் தண்ணீரை ஊற்ற முடியும், ஆனால் மருந்தை செலுத்த முடியாது. நீ இங்கே வா. நாம் இருவரும் சேர்ந்து அவருக்கு இந்த மருந்தை கொடுக்க முடியும்” என அந்த குறுந்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கணவனை கொடூரமாக கொன்ற மனைவி
காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கூடுதல் தூக்க மாத்திரைகளை கொடுத்து கரணை கொன்ற பிறகு அவரது மரணம் தற்செயலானதாக காட்ட அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அருகிலிருந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்ற சுஸ்மிதா, தனது கணவர் மின்சார தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, சுஸ்மிதாவின் தந்தையும் அவரது உறவினரான ராகுலும், பிரேத பரிசோதனை வேண்டாம் என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
குற்றவாளிகள் கைது
இந்த சூழலில் தான் ராகுல் மற்றும் சுஸ்மிதா இடையேயான இன்ஸ்டாகிராம் உரையாடல் வெளிச்ச்சத்திற்கு வந்தது. அதன் அடிப்படையில் கரணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட சுஸ்மிதா அளித்த வாக்குமூலத்தில், “கரண் தன்னை அடித்ததாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும்” குற்றம்சாட்டியுள்ளார்.





















