Aadi Krithigai 2025: ஓம் முருகா.. இன்று ஆடிக்கிருத்திகை.. காலை முதல் கோயில்களில் குவியும் பக்தர்கள்!
Aadi Krithigai 2025: ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்து வருகிறது.

Aadi Krithigai 2025: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளில் ஆடிக்கிருத்திகையும் ஒன்றாகும். ஆடி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரம் ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது. சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக இந்த கார்த்திகை நட்சத்திரத்தை ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.
இன்று ஆடிக்கிருத்திகை:
நடப்பாண்டில் வரும் ஆடி மாதத்தில் இரண்டு கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இன்றும், வரும் ஆகஸ்ட் 16ம் தேதியும் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் என்று ஆடிக்கிருத்திகை? என்ற குழப்பம் பக்தர்களுக்கு எழுந்தது. முருகனின் முதல் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில கோயில்களில் இன்றே ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.

திருத்தணி, சுவாமிமலை உள்ளிட்ட சில அறுபடை கோயிலிலும், பிற முருகன் கோயிலும் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது. ஆன்மீக பெரியோர்கள் இந்த இரண்டு நாளையும் ஆடிக்கிருத்திகையாக பக்தர்கள் கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
குவியும் பக்தர்கள்:
இதையடுத்து, முருக பக்தர்களால் இன்று ஆடிக்கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள் காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் சிறப்ப பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாட்டின் பிற புகழ்பெற்ற முருகன் கோயில்களான சிக்கல் சிங்காரவேலர் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், சென்னை வடபழனி முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சிறப்பு வழிபாடுகள், பூஜைகள்:
பக்தர்கள் அதிகளவில் இன்று குவிவார்கள் என்பதால் அந்தந்த கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், காவல்துறை சார்பிலும் பக்தர்கள் வசதிக்காகவும், வழிபாட்டிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல கோயில்களில் அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
விரதம்:
ஆடிக்கிருத்திகை என்றாலே திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட பல வேண்டுதல்களுக்காக விரதம் இருப்பது பக்தர்களின் வழக்கம் ஆகும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் விரதம் இருப்பது பல பக்தர்களுக்கு ஏதுவான நாளாக அமைந்துள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் காலையிலே எழுந்து குளித்து தங்களது வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில்களில் சாமி தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள்.
சாமி தரிசனம்:

இன்று காலை முதல் இரவு வரை முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும். சமீபத்தில் குடமுழுக்கு நிறைவு பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில், கந்தகோட்டம் குமரன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் அதிகளவு பக்தர்கள் கூட்டம் காலை முதல் காணப்பட்டு வருகிறது.
இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனையும் படுஜோராக காலை முதலே நடந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.






















