குற்றாலத்தில் 3வது நாளாக அருவியில் குளிக்க தடை..! நெல்லையிலும் அனைத்து அருவிகளும் மூடல்.!
தற்போது அருகருகே உள்ள இரண்டு மாவட்டங்களிலும் வெவ்வேறு காரணங்களுகாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த வகையில் குற்றாலத்தில் சாரல் மழையுடன் சீசன் களைகட்டி காணப்படும் நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தொடர் சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 3 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியானது மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் நேற்று இரவு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவிகளில்களில் குளிப்பதற்கு தடை உத்தரவானது நீடித்து வருகிறது. மேலும் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அதே போல நெல்லை மாவட்டத்தில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 31.07.24 முதல் 08.08.24 வரை பாபநாசம் சூழல் சுற்றுலா அகஸ்தியர் அருவி, முண்டந்துறையில் Vehicle Safari, மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை சூழல் சுற்றுலா பகுதிகள் மூடப்படுகிறது என வனத்துறையானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்காசியில் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படாத சமயங்களில் வெளி ஊர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வந்து குளித்து மகிழ்வது உண்டு. தற்போது இரண்டு மாவட்டங்களிலும் வெவ்வேறு காரணங்களுகாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்துள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பிலும் காத்திருக்கின்றனர்.