நேற்றுடன் நிறைவடைந்த கள்ளக்கடல் எச்சரிக்கை - கடலுக்கு சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களின் கடலின் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது என்றும், வருகிற 14-ந் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விசைப்படகுகள் ஏற்கனவே தடைக்காலம் காரணமாக கடலுக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள சுமார் 3 ஆயிரத்து 500 நாட்டுப்படகுகளும் நேற்று கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மீன்வளத்துறையின் எச்சரிக்கை நேற்றிரவு11.30 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஏதுவாக வலைகள் மற்றும் மீன்பதப்படுத்த தேவையான ஐஸ் கட்டிகளை நிரப்பத் துவங்கினர். இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 266, தருவைகுளத்தில் 243, வேம்பாரில் 40, திரேஸ்புரத்தில் 2 என மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். பெரும்பாலான படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில படகுகளை கரைக்குக் கொண்டு வந்து சீரமைப்பு பணிகளை உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.
விசைப்படகு மீனவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து படகுகளை முழுமையாக சரி பார்த்து தயார் செய்துள்ளனர். மேலும், வலைகளையும் முழுமையாக சீரமைத்து சரி செய்துள்ளனர். பலர் புதிய வலைகளையும் வாங்கி வைத்துள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளன. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை கடலில் செலுத்தியும். இயந்திரத்தை இயக்கியும் பரிசோதனை செய்து வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தடைக்காலம் இன்னும் இரு தினங்களே உள்ளதால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மீண்டும் களைக்கட்ட தொடங்கும். அதுபோல மீன்களின் விலையும் குறையத் தொடங்கும். தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் பராமரிப்பு பணிக்காக கடலில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட விசைப்படகுகள் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல ஏதுவாக கடலில் இறக்கும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.