திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு
காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி சேரன் புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெட்ரோல் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆவூர் கீழத் தெருவை சேர்ந்த தங்கபாலு மகன் 24 வயதான சேரன் என்பவர் தனது தம்பி தினகரன் மற்றும் ஆவூர் பாப்பாரத்தெரு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோருடன் கடந்த ஜூன் 28ம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் ஆவூர் கடை தெருவிற்கு சேரனின் ஆட்டோ உரிமையாளரான ஷேக் அலாவுதீனிடம் கணக்கு ஒப்படைப்பதற்காக சென்று உள்ளனர். அந்த நேரத்தில் தினகரன் மற்றும் சிலம்பரசனை ஆவூர் கடை தெருவில் நிற்கும்படி சேரன் கூறிச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஆவூர் சாலுவம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரான கரன், கௌதம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சாதி பெயரை கூறி திட்டி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் அணிந்திருந்த கடுக்கன் ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்து இதனை தட்டி கேட்ட சேரனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து சேரனின் தாய் அஞ்சலி தேவியையும் அவர்கள் சாதிப் பெயரால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி சேரன் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இழுக்கடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மூன்றாம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்படாத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சேரனின் அம்மா அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையை பரிசோதித்து அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடமிருந்து மனு பெறப்பட்டு இந்த மனு மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்துள்ள தினகரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தற்போது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேரனின் அம்மா அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையில் இருந்த பெட்ரோல் கேனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.